Cricket
கம்பீரத்தை கூட்டுமா கவுதமின் பயிற்சி?…இரண்டாவது போட்டியில் இந்தியா – இலங்கை இன்று மோதல்…
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை வென்று அசத்தியது இந்தியா. இரு அணிகளுக்கும் இடையே முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி நடந்து முடிந்தது. எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வி இன்றி இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஒரு ரன் மட்டுமே அடிக்க வேண்டிய நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அதிரடியாக ஆட நினைத்து முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தது மட்டுமல்லாமல் போட்டி சமனடைய காரணமாக மாறினார்.
இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று மதியம் கொழும்பு பிரமதாஸா மைதானத்தில் வைத்து இந்திய நேரப்படி மதியம் இரண்டு முப்பது மனிக்கு துவங்க உள்ளது. இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தர வரிசையில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் முன்னாள் உலக சாம்பியனான இலங்கை அணியின் தற்போதைய ஆட்டம் கத்துக் குட்டி அணிகள் ஆடுவது போல இருந்து வருகிறது.
இருபது ஓவர் உலகக் கோப்பை, ஜிம்பாப்வே அணியுடனானை இருபது ஓவர் போட்டி தொடர், இலங்கையுடனான இருபது ஓவர் போட்டி தொடர் வெற்றி என அடுத்தடுத்து சாதனைகளை புரிந்து வரும் இந்திய வீரர்கள் முதல் போட்டியில் தங்களது முழுத் திறமையையும் காட்டத் தவறியதால் தான் போட்டி சமனில் முடிந்ததாக விமர்சனங்கள் இருந்து வருகிறது.
அதோடு மட்மல்லாமல் மூன்று போட்டிகளை மட்டுமே கொண்ட தொடர் என்பதால் இன்று வெற்றி பெறும் அணி முன்னிலை பெறும்.
இதனால் இன்றைய இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 2011ம் ஆண்டு இந்தியாவில் வைத்து இதே இலங்கை அணிக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த கவுதம் கம்பீர் தான் இப்போது பயிற்சியில் இந்திய அணியை வழிநடத்துகிறார்.
கடந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்தி கம்பீரத்தை கூட்டி இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறும் என்பதுவே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது இப்போது.