Cricket
டிராவிட், சச்சின் சாதனையை கடந்த ரோகித்
இந்திய கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் புது சாதனைகளை படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இவர் இந்திய அணியின் முன்னாள் வீரர், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-ஐ பின்னுக்குத் தள்ளி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அரைசதம் கடந்த ரோகித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் 31 சதங்கள் மற்றும் 57 அரைசதங்களை மொத்தத்தில் விளாசியுள்ளார். இதுவரை அதிகபட்சம் 10,831 ரன்களை அடித்துள்ள ரோகித் சர்மாவின் சராசரி 49.23 ஆகும். இவரது ஸ்டிரைக் ரேட் 92.93 ஆகும். ஒருநாள் போட்டிகளில் 264 ரன்களை விளாசியது, இவரின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
துவக்க வீரராக களமிறங்கி, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். 43 சதங்கள், 78 அரைசதங்களுடன் ரோகித் சர்மா இதுவரை 121 முறை அரைசதங்களுக்கும் அதிக ரன்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 45 சதங்கள் மற்றும் 75 அரைசதங்களை விளாசியுள்ளார். இவர் ஒட்டுமொத்தத்தில் 120-க்கும் அதிகமுறை அரைசதங்களுக்கும் அதிக ரன்களை அடித்துள்ளார்.
போட்டியின் முதல் பத்து ஓவர்களில் அரைசதம் அடித்ததில், ரோகித் சர்மா இதுவரை நான்குமுறை செய்துள்ளார். இந்த பட்டியலில் இவர் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக்-இன் சாதனையை துரத்தி வருகிறார். விரேந்திர சேவாக் ஒருநாள் போட்டிகளின் முதல் பத்து ஓவர்களுக்குள் ஏழு முறை அரைசதங்களை விளாசியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி சர்வதேச ஒருநாள் போட்டிகளின் முதல் பத்து ஓவர்களில் சிக்சர்களை விளாசுவதில் ரோகித் சர்மா சிறந்து விளங்குகிறார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஒருநாள் போட்டிகளில் இதுவரை 54 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் உள்ளார். இவர் 24 சிக்சர்களை அடித்துள்ளார்.