tech news
வெளியாகப்போகும் புது வாட்ச்.. குட்டீஸ்களை குறிவைக்கும் ஆப்பிள்..!
ஆப்பிள் வாட்ச் SE 2024 மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது அந்நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 10 மாடல்களுடன் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புது ஸ்மார்ட்வாட்ச் குழந்தைகளை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய ஆப்பிள் வாட்ச் மாடலில் இதற்காக ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க வகையில், புதிய வாட்ச் மாடல்கள் ஏராளமான வண்ணங்களில் கிடைக்கும். இது வழக்கமான ஆப்பிள் வாட்ச் மாடல்களை விட அதிக நிறங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் உறுதியான பிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக SE சீரிஸ் ஆப்பிள் வாட்ச் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த வாட்ச் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற டிசைன் கொண்டிருக்கும் என்றும் அவர்களை கவரும் வகையில் விசேஷ நிறங்களில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 9 மாடல்களை மிட்நைட், ஸ்டார்லைட் சில்வர், ரெட் மற்றும் பின்க் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் நிறுவன சாதனங்கள் மிட்நைட் மற்றும் சில்வர் நிற ஆப்ஷன்கள் கடந்த சில ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றில் புதிய நிறமாக பின்க் மட்டுமே கூற முடியும். புதிய ஆப்பிள் வாட்ச் SE மாடலில் இந்த போக்கை முற்றிலும் மாற்றும் வகையில், ஆப்பிள் நிறுவனம் பல்வேறு புதிய நிறங்களை பயனர்களுக்கு ஆப்ஷனாக வழங்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஆப்பிள் வாட்ச் SE 2024 மாடல் ரிஜிட் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது.
பிளாஸ்டிக் மூலம் உருவாக்கும் போது ஆப்பிள் வாட்ச் SE விலையை மற்ற மாடல்களை விட கணிசமான அளவுக்கு குறைவாக நிர்ணயிக்க முடியும். இதன் மூலம் இந்த சாதனத்தை பலர் வாங்குவதற்கு வாய்ப்பாக அமையும். இவைதவிர புதிய வாட்ச் SE மாடல் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளன.