Cricket
டிராவிட் இணையும் IPL அணி இதுவா?
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து டிராவிட் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளர் ஆவது பற்றி சூசகமாக தெரிவித்து இருந்தார்.
சர்வதேச அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்கும் போது நீண்ட காலம் அணியுடன் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் ஐபிஎல் அணிகளுக்கு குறுகிய காலம் செலவிட்டால் போதும் என்பது போல் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்து இருந்தார். இவரின் கருத்தைத் தொடர்ந்து பல ஐபிஎல் அணிகள் இவரை பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ராகுல் டிராவிட் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் துவக்க சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. தற்போது இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளர் யாரும் இல்லை. முன்னதாக பயிற்சியாளராக இருந்த இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா 2021 ஆம் ஆண்டு முதல் இயக்குநராக இருந்து வருகிறார். இந்த அணிக்கு ஷேன் பான்ட் மற்றும் டிரெவர் பென்னி ஆகியோர் துணை பயிற்சியாளர்களாக இருக்கின்றனர்.
தற்போதைய தகவல்களின் படி குமார் சங்கக்காராவை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வார் என்று கூறப்படுகிறது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தான் ராகுல் டிராவிட் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்தார்.