Cricket
டெஸ்ட் கிரிக்கெட் 150 ஆண்டுகள்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதல் – எப்போ தெரியுமா?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியா ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த இருக்கிறது. இந்த போட்டி 2027 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது.
முன்னதாக 1877 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று அசத்தியது. இதன் பிறகு 1977 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் 100 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 45 ரன்களில் வெற்றி பெற்றது.
2024-25 முதல் 2030-31 வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள், டி20 மற்றும் இதர போட்டிகளுக்கான உரிமத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதி செய்துவிட்டது. கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் அரசு அமைப்புகளுடன் கூட்டணி அமைக்க ஏதுவாக இந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
“2027 மார்ச் மாதம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டின் 150-வது ஆண்டு விழாவுக்கான டெஸ்ட் போட்டி மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும். இந்த சூழலில் இங்கிலாந்து அணியை வரவேற்க எங்களால் காத்திருக்க முடியவில்லை. நீண்ட கால உரிமைகளை உறுதி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது அடுத்த ஏழு ஆண்டுகளில் சில அருமையான பகுதிகளில் சிறப்பான கிரிக்கெட் நடைபெற இருப்பதை உறுதி செய்கிறது,” என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லெ தெரிவித்தார்.