Cricket
டி20 உலகக் கோப்பை 2024: ரேட்டிங் போட்ட ஐசிசி.. பிட்ச்-ஆ அது?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய இந்த தொடர் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தொடரின் முதற்கட்ட போட்டிகளின் போடு ஆடுகளம் மிக மோசமாக இருப்பதாக கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் போட்டியை கண்ட கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலத்தரப்பினரும் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்ற ஆடுகளங்களுக்கு ஐசிசி ரேட்டிங் வழங்கி இருக்கிறது.
சர்வதேச போட்டிகளில் பிட்ச் மற்றும் அதை சுற்றியுள்ள அவுட்ஃபீல்டு எப்படி இருந்தது என்பதை ரேட்டிங் அடிப்படையில் தெரிவிப்பதை ஐசிசி வழக்கமாக கொண்டிருக்கிறது. இவை மிக அற்புதமாக இருந்தது என்பதில் துவங்கி விளையாட தகுதியற்றது என ஐந்து நிலைகளில் ரேட்டிங் தெரிவிக்கப்படும். அதன்படி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஆடுகளம் எப்படி இருந்தது என்பதை ஐசிசி ரேட்டிங் முறையில் தெரிவித்து உள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நியூ யார்க் நசௌ கவுண்டி மைதானத்தின் ஆடுகளம் மற்றும் அரையிறுதிப் போட்டி நடைபெற்ற பிரைன் லாரா அகாடமி மைதானத்தின் ஆடுகளம் திருப்தியற்ற வகையில் இருந்தது என ஐசிசி ரேட்டிங் தெரிவிக்கிறது.
இந்த இரண்டு ஆடுகளங்களிலும் இலங்கை அணி 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மற்றொரு போட்டியில் அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதுதவிர இந்த ஆடுகளங்களால் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களத்தில் இருந்து பாதியில் வெளியேறும் சூழல் அரங்கேறியது.
ஆடுகளங்களை தவிர அவுட்ஃபீல்டுகள் அனைத்தும் சிறப்பாகவே இருந்தது என ஐசிசி தெரிவித்துள்ளது. இதில் நியூ யார்க் மற்றும் குயானா மைதானங்கள் மட்டும் தான் அவுட்ஃபீல்டுக்கு திருப்திகர ரேட்டிங் பெற்றன. மற்ற மைதானங்களின் அவுட்ஃபீல்டுகள் சிறப்பாக இருந்ததாக ஐசிசி ரேட்டிங் வழங்கியது.