Cricket
ஈசியா சொல்லலாம், ஆனால்.. கோலியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் பாக். வீரர்..
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்து புகழின் உச்சியில் விராட் கோலி தொடர்ந்து நீடிக்கிறார். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி, தனது அசாத்திய திறமை மூலம், இந்திய அணியில் தனக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி, விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசும் போது, கோலி 16 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நிறைவு செய்து இருக்கிறார் என்று எளிதில் கூறிவிடலாம். ஆனால், அதற்கு பின்னணியில் அவர் எதிர்கொண்ட உயர்வுகள், தாழ்வுகள் மற்றும் அவர் எப்படி அதற்கு தயாராகிறார் என்பதை யாரும் பார்ப்பதில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பசித் அலி, “சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, யூனிஸ் கான் மற்றும் ஜாவெத் மியான்தத் ஆகியோர் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடினர். அவர்கள் தங்களது கடின உழைப்பு காரணமாக கிரிக்கெட்டில் சிறந்து விளங்கினர். அந்த வகையில், விராட் கோலி 16 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறார் என்று கூறுவது மிகவும் எளிமையான விஷயம்.”
“ஆனால், இன்றைய இளம் வீரர்களுக்கு அவர் எத்தனை ஏற்றதாழ்வுகளை எதிர்கொண்டு வந்துள்ளார்? போட்டி நாளில் அவர் அதிகாலை எத்தனை மணிக்கு எழுந்து ஜிம்மில் தயாராகிறார்? என்பது தெரியாது. இதே போன்று சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் மீது பேரன்பு கொண்டிருந்தார், அதனாலேயே அவர் உறங்கும் போது தன்னுடன் பேட் வைத்திருந்தார்.”
“அவரது அர்பணிப்பு மற்றும் அவர் செலுத்தும் கடின உழைப்பை பாருங்கள். பேட்டிங்கின் போது சீக்கிரம் அவுட் ஆனாலும், களத்தில் ஃபீல்டிங் செய்யும் போது அவர் சிறப்பாக செயல்படுகிறார். களத்தில் கோலி இருக்கிறார் என்பதை அவர் பந்தை எதிர்கொள்ளும் போது ரசிகர்கள் எழுப்பும் கரகோஷத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இதுதான் அவர் 16 ஆண்டு காலணமாக செய்து வரும் கடின உழைப்புக்கான அங்கீகாரம்,” என்று தெரிவித்தார்.