Cricket
ஒருபக்கம் கொலை வழக்கு, மறுபக்கம் ஐசிசி.. ஷகிப்-ஐ துரத்தும் துயரம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் பாகிஸ்தான் அணிக்கு ஆறு புள்ளிகளும், வங்கதேசம் அணிக்கு மூன்று புள்ளிகளும் அதிரடியாக குறைக்கப்பட்டன. ராவல்பிண்டியில் இரு அணிகள் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக வங்கதேசம் அணிக்கு மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இரு அணிகள் இடையே கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் முதலாவது டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது. அதில் வங்கதேசம் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல் முறையாக வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் 14 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. அந்த வகையில் இரு அணிகள் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பெற்ற முதல் வெற்றி இது என்பதோடு, பத்து விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற முதல் வெற்றியும் இது ஆகும். இந்த போட்டியில் ஆறு ஓவர்கள் தாமதமாக வீசிய பாகிஸ்தான் அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இருந்து ஆறு புள்ளிகளை ஐசிசி குறைத்துள்ளது. மேலும், அந்த அணியின் போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மட்டுமின்றி வங்கதேசம் அணியும் மூன்று ஓவர்களை தாமதமாக வீசியுள்ளது. இதற்காக அந்த அணிக்கு மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக செலுத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானை குறிவைத்து வங்கதேசம் வீரர் ஷகிப் அல் ஹாசன் பந்தை வேகமாக வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷகிப் அல் ஹாசனின் இந்த நடவடிக்கை ஐசிசி நடத்தை விதிகளை மீறியுள்ளது. இதற்காக அவருக்கு மதிப்பிழப்பு புள்ளியும், அவரது போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாகவும் செலுத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
ஐசிசியின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒன்பது அணிகள் இடம்பெற்றுள்ள புள்ளிகள் அட்டவணையில் பாகிஸ்தான் அணி எட்டாவது இடத்திலும் வங்கதேசம் அணி ஏழாவது இடத்திலும் உள்ளன.
முன்னதாக வங்கதேசத்தில் நடைபெற்ற கடும் போராட்டம், அதன் விளையாக ஏற்பட்ட வன்முறையில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ரூபெல் என்ற நபர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது தந்தை அளித்த புகாரில் ஷகிப் அல் ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடபோர் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள இந்த வழக்கில் ஷகிப் அல் ஹாசனின் பெயர் 28 ஆவதாகவும், அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் மொத்தம் 154 பேர் மீது வழக்கு பதியப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.