Cricket
உலகக் கோப்பை அணியில் சேர்க்காத ரோகித்.. அதன் பின் கூறியது இதுதான்.. ரிங்கு சிங்
அபாரமான ஸ்டிரைக் ரேட் மற்றும் சராசரியுடன் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ரிங்கு சிங். எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரிங்கு சிங் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார். இதன் காரணமாக இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. எனினும், எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் வகையில் ரிங்கு சிங் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. எனினும், அணியில் சேர்க்கப்படாதது குறித்து கேப்டன் ரோகித் சர்மா, ரிங்கு சிங்கிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது, “அவர் என்னிடம் வந்து, பரவாயில்லை, நீ இன்னும் இளம் வீரர் தான் உனக்காக இன்னும் பல தொடர்கள் வரவுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த விஷயத்தை நினைத்து ஏமாற்றம் அடைவதோடு, போட்டியில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று ரோகித் சர்மா தன்னிடம் கூறியதாக ரிங்கு சிங் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படாத நிலையில், அதன்பிறகு நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் என எல்லா போட்டிகளிலும் ரிங்கு சிங் இடம்பிடித்திருந்தார்.
சர்வதேத கிரிக்கெட்டில் ரிங்கு சிங்கின் சராசரி தற்போது 60 ஆக இருக்கிறது. இந்தியாவுக்காக 17 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரிங்கு சிங்கின் ஸ்டிரைக் ரேட் 174 ஆகும். மேலும் தான் விளையாடிய 17 போட்டிகளில் ரிங்கு சிங் 10 போட்டிகளில் அவுட் ஆகாமல் களத்தில் இருந்துள்ளார்.