tech news
எலான் தலையில் இடியை இறக்கிய உத்தரவு.. பிரேசிலில் எக்ஸ்-க்கு தடை
பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு தொலைத் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. எக்ஸ் தளத்திற்கு பிரேசிலில் தடை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும், பிரேசில் நாட்டில் எக்ஸ் தள சேவைகள் முழுமையாக முடங்கியது.
முன்னதாக பிரேசில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எக்ஸ் நிறுவனம் தவறியது. நீதிமன்ற உத்தரவை மீறிய காரணத்தால் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த எலான் மஸ்க், பிரேசில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலெக்சான்ட்ரே டி மொரெஸ் நியாயமற்ற தணிக்கையை அமல்படுத்த வலியுறுத்துகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அலெக்சான்ட்ரெ டி மொரெஸ் சமூக வலைதளங்கள் வெறுப்பை பேச்சு தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
எக்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், “பிரேசிலில் உண்மைக்கான நம்பர் ஒன் ஆதாரத்தை அவர்கள் முடக்கியுள்ளனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விளம்பர வருவாய் கிடைக்காமல் தவித்து வந்த காலத்தில் கைக்கொடுத்த மிகமுக்கிய சந்தையை எக்ஸ் தளம் தற்போது இழக்கிறது. நேற்றிவு வரை பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் இயங்கிவந்த நிலையில், இன்று அதிகாலை முதல் எக்ஸ் சேவையை பயன்படுத்த முடியவில்லை என அந்நாட்டு பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரேசில் நாட்டில் ஸ்டார்லிங்க் நிறுவன வங்கி கணக்குகளுக்கு பிரேசில் நாட்டில் முடக்கப்பட்டது. செயற்கைக் கோள் மூலம் இணைய சேவையை வழங்கி வரும் ஸ்டார்லிங்க் எலான் மஸ்க்-க்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.