Cricket
ஐசிசி தலைவராகும் ஜெய் ஷா- முதல் முறை மவுனம் களைத்து பேசிய பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
பிசிசிஐ தலைவராக இருக்கும் ஜெய் ஷா கடந்த மாதம் ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் ஜெய் ஷாவிற்கு கிட்டத்தட்ட 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்காக ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், அதன் உறுப்பினர்களான 16 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் ஐசிசி தலைவராக ஜெய் ஷாவை தேர்வு செய்ய பாகிஸ்தான் தவிர்த்து மற்ற 15 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை என பாகிஸ்தான் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது.
ஐசிசி தலைவர் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீண்ட காலம் அமைதி காத்த நிலையில், தற்போது அதன் தலைவர் முதல் முறையாக மவுனம் களைத்து பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி, “நாங்கள் ஜெய் ஷாவுடன் தொடர்ச்சியாக பேசி வருகிறோம், அவர் ஐசிசி தலைவர் ஆவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.”
“ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று (செப்டம்பர் 8) மற்றும் நாளை (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக சல்மான் நசிர் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் புதிய தலைவர் விவகாரம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டும்,” என்று மொசின் தெரிவித்தார்.