Cricket
என்னோட சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது… மார்தட்டும் முரளிதரன்..!
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் முத்தையா முரளிதரன். சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன், இன்றும் அதிக விக்கெட்டுகளை எடுத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
ஆஃப்-ஸ்பின்னரான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், தனது 800 விக்கெட் சாதனை தற்போதைக்கு யாரும் முறியடிப்பார்கள் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்தார். சமீபத்திய கிரிக்கெட் வீரர்கள் குறைந்த ஓவர் கொண்ட போட்டிகளில் விளையாடவே விரும்புகின்றனர். இதன் காரணமாக தற்போதைய இளம் வீரர்கள் யாரும் தனது சாதனையை நெருங்குவது சந்தேகம் தான் என்றார்.
“டெஸ்ட் கிரிக்கெட் பற்றி உண்மையில் கவலையாகவே உள்ளது. ஒவ்வொரு நாடும் கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆஷஸ் தொடரில் விளையாடலாம். ஆனால், மற்ற நாடுகளில், பலரும் டெஸ்ட் போட்டிகளை பார்ப்பது இல்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் குறைவாகவே இருக்கும்.”
“டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் கடினம். தற்போதைய சூழல் குறைந்த ஓவர் கிரிக்கெட்டுக்கு மாறிவிட்டது. மேலும், நாங்கள் 20 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடினோம். தற்போது ஒரு வீரர் கிரிக்கெட் விளையாடும் காலக்கட்டும் மிகவும் குறைந்துவிட்டது.”
“நிலைத்தன்மை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர்கள் எவ்வளவு சிறப்பாக உள்ளனர் என்பது பிரச்சினையே இல்லை, அனைவரும் திறமை மிக்கவர்கள். ஆனால், அவர்கள் எப்படி அனுபவம் பெறுகிறார்கள்? சமீப காலங்களில், இது மிகவும் கடினம். அவர்கள் மனங்களில் ஏராளமான தொடர்கள் உள்ளன,” என்று முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.