latest news
மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பு?…மேலிட முடிவே…ஜெயக்குமார் கருத்து!…
மது ஒழிப்பு மாநாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கையில் பதாகைகளுடன் வீட்டின் முன்பு கோஷமிட்டு போராடியதை அனைவரும் அறிவர் என்றும்.
மது என்பது சமுதாயத்திற்கு மிகப்பெரிய கேடு என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என சொல்லப்பட்டிருந்தது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டி பேசினார்.
தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது தான் திமுக அரசு செய்த சாதனை என்றும், இது தோழமை கட்சிகளுக்கு இது பிடிக்கவில்லை என்றும், அதன் அடிப்படையில் தான் திருமாவளவன் முதல் ஆளாக குரல் கொடுத்துள்ளார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார்.
குரல் கொடுத்தது மட்டுமன்றி நல்ல விஷயத்திற்காக மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படும் மாநாடு என்பதால் அதிமுகவிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக என்பது தவிர்க்க முடியாத மாபெரும் மக்கள் இயக்கம் என்றும் மக்களின் பேராதரவு பெற்றுள்ள இயக்கம் என்பதன் அடிப்படையில் தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். இந்த மாநாட்டில் பங்கேற்க போவதா?, இல்லையா? என்பது குறித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை முடிவு செய்யும் என கருத்து தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.