Cricket
மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி தொடர்களில் விளையாட வந்துள்ள வங்கதேச அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்றது. முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்தது.
துவக்கத்தில் இந்திய வீரர்களை அசைத்துப் பார்த்த பங்களாதேஷ் அணியை ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை தங்களது அபாரமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சினால் திணறடித்தனர். போட்டி நடக்க வேண்டிய ஐந்து நாட்களுக்குள்ளாகவே இரண்டு இன்னிங்ஸ்களும் முடிவடைந்து பங்களாதேஷ் பரிதாபமாக தனது வெற்றியை இந்திய அணியிடம் பறிகொடுத்தது.
இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று துவங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தது. முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மூன்று விக்கெட்டுகளை இழந்து நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்தது வங்கதேச அணி முப்பத்தி ஐந்து ஓவர்கள் நிறைவடைந்திருந்த நிலையில்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தங்கு தடை ஏதுமின்றி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. பலத்த மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் நடைபெறாமல் போனாலும் நாளை முழுமையாக போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.