latest news
எதுவும் மாறும்!..அது இயற்கையால் மட்டுமே சாத்தியம்!…
மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது, இதனை நன்கு மனதில் பதித்து வைத்துக் கொண்டு தங்களது வாழ்வின் தாரக மந்திரமாக இதனை நினைத்து செயல்களை செய்து வருபவர்கள் சாதனைகளுக்கும், பெரும் புகழுக்கும், பெயருக்கும் சொந்தக்காரர்களாக மாறி விடுகின்றனர்.
எதுவும் மாறும் என்பதுவே பக்குவப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டமாக இருக்கும். இப்படித் தான் மனித வாழ்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் நடந்ததால் இன்று விலங்குகளிலிருந்து மாறுபட்டு இருக்கிறான்.
இப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்க, இயற்கை அவ்வப்போது எதுவும் மாறும் என்கின்ற பாடத்தை மனிதனுக்கு அவ்வப்போது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இதனை முற்றிலுமாக உணராத மனித இனத்தில் சிலர் தங்களால் தான் எல்லாமே என்ற ஆணவத்தினை கொண்டிருக்கின்றனர்.
இயற்கை அழகோடு காட்சியளித்த கேரள மாநிலம் வயநாடு ஓரே இரவில் இயற்கையின் ருத்ர தாண்டவத்திற்கு இரையாக மாறியது. இரவு தூங்கச் செல்லும் போது நாளைய விடியலுக்கு பிறகான தங்களது வேலைகள் குறித்த திட்டமிடலை செய்து விட்டு படுக்கைக்கு சென்று கூட இருந்திருக்கலாம் பலரும், ஆனால் அவர்களில் சிலர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் இந்த இரவிற்கு பிறகு நிரந்தர நித்திரை என்று.
வட ஆப்பிரிக்காவில் உள்ளது சஹாரா பாலைவனம், சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பசுமையான பகுதியாக இருந்து வந்த சஹாரா. பின்னர் நாட்கள் செல்லச் செல்ல உலகின் மிகப்பெரிய வறட்சியை கண்ட பாலைவனமாக மாறியது.
அரபிய மொழியில் சஹாரா என்றால் பாலைவனம் எனப் பொருள்படுகிறது. சஹாரா பாலைவனம் 3,629,360 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டது. கிழக்கிலிருந்து மேற்காக 4,800 மைல்கள் நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 1,118 மைல் அகலமும் கொண்டது. இது மட்டும நாடாக இருந்திருந்தால் உலகின் ஐந்தாவது பெரிய நாடாக உருமாறியிருக்கும்.
உலகின் வெப்பம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்படக்கூடிய சஹாராவில் பகல் நேரத்தில் எப்படி வெப்பம் உச்சம் பெருகிறதோ அதே போல் இரவு நேரத்தில் மிக விரைவாக வெப்பம் குறையும் இடமாக இருந்து வருகிறது. பாலைவனத்தில் மழை என்பது அரிதான ஒன்றாக பார்க்கபடுகிறது.
ஆனால் சஹாரா பாலைவன ஐம்பது வருட வரலாற்றில் நடைபெறாத இயற்கைனால் மட்டுமே மாற்றியமைக்கக்கூடிய நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஓராண்டில் சஹாரா பாலைவனத்தின் பெய்ய வேண்டிய மழை பொழிவு ஓரிரு, நாட்களிலேயே பெய்து விட்டதாம். இதனால் சஹாராவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும் விட்டதாம்.
கேட்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும் இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்துவதை எப்படி பார்க்கலாம் என்றால் இவ்வுலகில் எதுவுமே நிரந்தரம் கிடையாது, எல்லாமே மாற்றத்திற்கு கட்டுப்பட்டது. மாற்றம் ஒன்றே நிலையாக மாறக்கூடிய ஒன்று.