Connect with us

Cricket

2வது ரன் ஓடிய பண்ட்.. ‘நோ’ சொல்லி குதித்த சர்ஃப்ராஸ் கான்.. பதறிய ரோகித்.. வீடியோ வைரல்

Published

on

முதல் நாள் மழை, இரண்டாம் நாளில் நியூசிலாந்து ஆதிக்கம், மூன்றாம் நாள் இந்திய அணி போராட்டம் என பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தின் கடைசி பந்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக இன்று (நான்காம் நாள்) காலை இந்திய அணிக்கு சர்ஃப்ராஸ் கானுடன் ரிஷப் பண்ட் களமிறங்கினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சர்ஃப்ராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடியும் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முதல் செஷனில் சர்ஃப்ராஸ் மற்றும் பண்ட் ஜோடி 50 ரன்களை கடந்தது.

இந்த நிலையில், போட்டியின் இடையில் சர்ஃப்ராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இடையே ஏற்பட்ட குழப்பம் இந்திய அணிக்கு மற்றொரு விக்கெட்டை காவு வாங்கியிருக்கும். இந்த சம்பவத்தை டிரெசிங் ரூமில் இருந்து பார்த்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், விக்கெட் பறிபோகவில்லை என்பதால் வாய்விட்டு சிரித்தனர். சர்ஃப்ராஸ் கான் முதல் ரன் ஓடிய நிலையில், இரண்டாவது ரன் எடுக்க முடியுமா என்று வேகமாக ஓட முயற்சித்தார்.

இதை சமிக்கையாக எடுத்துக் கொண்ட ரிஷப் பண்ட் சற்றும் தாமதிக்காமல் இரண்டாவது ரன் ஓட ஆரம்பித்துவிட்டார். பந்து ஃபீல்டரிடம் சென்றதை பார்த்துவிட்ட சர்ஃப்ராஸ் கான் இரண்டாவது ரன் ஓட வேண்டாம் என்று முடிவு செய்தார். அதற்குள் ரிஷப் பண்ட் கிரீஸை விட்டு வெளியே வந்துவிட்டார். உடனே அதிர்ச்சியடைந்த சர்ஃப்ராஸ் கான் ரன் வேண்டாம் என்று கூறி துள்ளி குதித்து செய்கை காண்பித்தார்.

அதன்பின் சுதாரித்துக் கொண்ட ரிஷப் பண்ட் கிரீஸுக்குள் நுழைந்தார். அதற்குள் நியூசிலாந்து கீப்பரிடம் பந்து கிடைத்த போதிலும், அவர் அதனை ஸ்டம்பிங் செய்ய முடியாதவராக காணப்பட்டார். இந்த சம்பவங்கள் ரிஷப் பண்ட், எதிரணி வீரர்கள் மட்டுமின்றி இன்னிங்ஸில் முன்னிலை பெற முடியுமா என்று எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரை உச்சக்கட்ட பரபரப்பில் தள்ளியது. எனினும், விக்கெட் இழக்கவில்லை என்பதை அறிந்து ரோகித் மற்றும் அஷ்வின் சிரித்தனர்.

களத்தில் சர்ஃப்ராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இடையே நடந்த குழப்ப சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை எடுத்துள்ள நிலையில் மழை குறுக்கிட்டதால், போட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியா சார்பில் சர்ஃப்ராஸ் கான் 125 ரன்களையும், ரிஷப் பண்ட் 53 ரன்களையும் எடுத்துள்ளனர்.

google news