இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜாக் கிராலி விக்கெட்டை ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தி அசத்தினார். பும்ராவின் அசத்தல் பந்துவீச்சு காரணமாக ஜாக் கிராலி வெறும் 4 ரன்களுக்கு நடையை கட்டினார். துவக்கத்திலேயே முதல் விக்கெட்டை இழந்த போதும் இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது.
இதன் காரணமாக அந்த அணியின் ஸ்கோர் அதிகரித்தது. எனினும், நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை எடுத்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் மூன்று விக்கெட்டுகளையும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வரும் ஜஸ்பிரித் பும்ரா நேற்றும் தனது அபாரமான ஃபார்மை வெளிப்படுத்த தவறவில்லை.
இந்த நிலையில், பும்ரா மட்டும் விக்கெட் கைப்பற்றுவது இந்திய அணி முன்னாள் வீரர்களை கொதிப்படைய செய்துள்ளது. இதுபற்றி முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறும் போது, “பும்ராவை நினைத்து உண்மையில் வருத்தமாக இருக்கிறது, அவருக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் மற்றும் சீரிஸ் போகும் போக்கு, எல்லாவற்றையும் நினைத்தால் அவர் மட்டும் தான் விக்கெட் கைப்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு ஆதரவாக மறுமுனையில் பந்துவீசுவோரும் விக்கெட் கைப்பற்ற வேண்டும்,” என்று தெரிவித்தார்.