இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி அங்கு வெற்றி பெறுவது இந்திய அணிக்கு சற்று கடினமான ஒன்று தான். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் உள்ள போது, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் அவரை மூன்றில் மட்டும் விளையாட செய்யும் முடிவுக்கு பலரும் புருவம் உயர்த்தியுள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முழுமையாக பங்கேற்ற நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவார் என்ற முடிவை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டும் பும்ராவை விளையாட செய்வதன் மூலம் அவரது பணிச்சுமையை குறைக்க முடியும் என்று கவுதம் கம்பீர் கூறியிருந்தார். பும்ராவின் உடல்நலன் சார்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பும்ரா விவகாரத்தில் கம்பீர் எடுத்திருக்கும் முடிவு குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “தற்போது அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் சிறந்த வீரர். இதனால் அவருக்கு ஓய்வு அளிப்பது குறித்த முடிவை எடுப்பது கடினமாக இருக்கும். ஆனால் என்னை பொருத்தவரை, கிரிக்கெட்டில் அல்டிமேட் வடிவமே டெஸ்ட் கிரிக்கெட் தான். இந்த டெஸ்ட் சீரிஸ் மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், அவரை இந்த தொடரின் ஐந்து போட்டிகளிலும் விளையாட செய்வது தான் சரியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.”
“நாங்கள் டேல் ஸ்டெய்ன் விவகாரத்தில் இதை தான் செய்வோம். முக்கியத்துவம் குறைந்த டி20, ஒருநாள் போட்டிகளில் டேல் ஸ்டெய்னுக்கு ஓய்வு அளித்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு அவரை தயார்படுத்துவோம். அந்த வகையில் பும்ரா விவகாரத்தில் இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. அவர்கள் ஐபிஎல் தொடரை பயிற்சியாக பார்த்திருப்பார்கள்.”
“அவர்கள் மருத்துவர் ஆலோசனையை கேட்டிருக்கலாம். அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறிவிட்டால் அதற்கு மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். இந்த விவகாரத்தை கையாள்வது இந்திய அணியின் பொறுப்பு,” என்றார்.