2025-ம் ஆண்டின் முதல் பாதியில் செகண்ட் ஹேண்ட் மொபைல் வாங்கிய இந்தியர்களில் ஐந்தில் மூன்று பேரின் தேர்வாக ஐபோனே இருந்ததாக யூஸ்டு கேட்ஜெட்ஸ் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் முன்னணி நிறுவனமான கேஷிஃபை தெரிவித்திருக்கிறது.
செகண்ட் ஹேண்ட் மொபைல் மார்க்கெட்
புதிய ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இணையாக இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் மொபைல் போன்களுக்கான மார்க்கெட் இருக்கிறது. ஆண்டுதோறும் செகண்ட் ஹேண்ட் மொபைல் விற்பனையைக் கண்காணித்து, பயனாளர்களின் தேர்வு குறித்து கேஷிஃபை நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிடுவது வழக்கம். அதன்படி, 2025-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்திய பயனாளர்களின் பழக்க வழக்கம் பற்றிய ஆய்வறிக்கையை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்
2024-ம் ஆண்டில் விற்கப்பட்ட மொத்த செகண்ட் ஹேண்ட் மொபைல் போன்களில் 64.5% என்று இடம்பிடித்திருந்த ஐபோன் விற்பனை, 2025-ம் ஆண்டின் முதல் பாதியில் 62.9% ஆக இருக்கிறது. இந்தப் பட்டியலில் 10.2 சதவிகிதத்துடன் ஒன்பிளஸ் இரண்டாவது இடத்தையும், 9.7 சதவிகிதத்துடன் ஷியோமி மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
சாம்சங் நிறுவனம் 6.7 சதவிகிதத்துடன் நான்காவது இடத்திலிருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதற்பாதியில் 60,000-த்துக்கும் அதிகம் என்கிற வகையில் செகண்ட் ஹேண்ட் மொபைல்களின் தேவை அதிகரித்திருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 33% அதிகமாகும்.
புது போன் வாங்குவதற்கான பணத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் 33% வாடிக்கையாளர்கள், தங்களின் பழைய போன்களை விற்று விடுகிறார்கள். டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் பயன்பாடு பரவலாக இருந்தாலும், செகண்ட் ஹேண்ட் போன் விற்பனையில் 77% பரிவர்த்தனைகள் பணமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
தங்கள் பழைய போன்களை ரிப்பேர் செய்து மீண்டும் பயன்படுத்துவதையே 57.3% வாடிக்கையாளர்கள் விரும்புவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.