AI Chip: அமெரிக்காவோடு நேருக்கு நேர் மல்லுக்கட்டத் தயாராகும் சீனா!

AI Chip விஷயத்தில் சீனா வெளியிட்டிருக்கும் சமீபத்திய வழிகாட்டுதல் நெறிமுறை அமெரிக்காவுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் அமைந்திருக்கிறது.

சீனாவின் முடிவு என்ன?

சீனாவில் இருக்கும் டேட்டா சென்டர்கள் அனைத்தும் இனிமேல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட AI Chip-களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறையை அந்நாடு கொண்டுவந்திருக்கிறது. இந்த வகையில் வெளிநாட்டு AI Chip-களை சீனாவைச் சேர்ந்த 30%-த்துக்கும் குறைவான நிறுவனங்களே பயன்படுத்தி வருகின்றன.

அந்த நிறுவனங்கள், தங்கள் பயன்படுத்தும் AI Chip-களை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சீனா அறிவுறுத்தி, இதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவையும் நிர்ணயித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் வெளிநாட்டுத் தயாரிப்பு AI Chip-களை சீன நிறுவனங்கள் அகற்ற வேண்டும். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து புதிதாக AI Chip-களை வாங்க கொடுத்திருக்கும் ஆர்டர்களையும் உடனடியாக நிறுத்தவும் அந்த வழிகாட்டுதல் நெறிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனால் யாருக்கு பாதிப்பு?

சீனாவுக்கு AI Chip-களை அதிக அளவு ஏற்றுமதி செய்வது Nvidia, Intel மற்றும் AMD ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் தான். அதிலும் குறிப்பாக Nvidia-வைப் பொறுத்தவரையில் சீனா அதனுடைய மிகப்பெரிய சந்தையாகக் கருதப்படுகிறது. இந்த புதிய வழிகாட்டுதல் மூலமாக அமெரிக்க நிறுவனங்களை சீனாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு தொடங்கியிருப்பதாகவே கருதப்படுகிறது.

Leave a Comment