2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்தின்
மனைவியும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த பிரச்சார பயணத்திற்கு ”உள்ளம் தேடி இல்லம் நாடி” என்று பெயர் வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனது பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளார். அங்கு படுகர் இன மக்களோடு இணைந்து அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி மக்களோடு மக்களாய் வாழ்ந்தார்.
மேலும் தேர்தல் வாக்குறுதிகளையும் தேர்தல் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,” வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம், இங்கு தொழில் செய்யலாம், அவர்களை கண்டிப்பாக தமிழ்நாடு வாழ வைக்கும்”.
“ஆனால் வட மாநிலத்திலிருந்து வந்து இங்கு தமிழ்நாட்டில் வேலை செய்யும் மக்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் இங்கு புரட்சி வெடிக்கும். அவர்கள் தமிழ்நாட்டிற்கு தாராளமாக வரலாம் வேலை பார்க்கலாம் உங்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வாக்குரிமை என்பது அவர்கள் பிறந்த மாநிலத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர தமிழ்நாட்டில் எக்காரணத்தைக் கொண்டும் இருக்கக் கூடாது”.
”இம்முறை தேர்தல் கூட்டணி வெறும் மாநிலங்களவைகாக மட்டும் வைக்க மாட்டோம். தேமுதிக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் என அனைவரும் விரும்பும் வகையில் தேமுதிக சிறப்பான வலுவான கூட்டணி அமைக்கும் அந்த வெற்றியை கேப்டன் காலடியில் கொண்டு போய் சேர்ப்போம்”.
”தற்போது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்சாலைகள் வரவேண்டும். தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்க வேண்டும். 2026 தேர்தலுக்குப் பின் எங்கள் கேப்டனின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் அதற்காக ஒன்று கூடி உழைப்போம்”. என்று பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.