தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜயின் புதுச்சேரி வருகையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை (டிசம்பர் 5) நடைபெற இருந்த விஜயின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து, டிசம்பர் 9-ஆம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தவெக தலைமை தீவிரமாக முயற்சித்து வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் புதுச்சேரியில் பொதுமக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். அதன்படி, நாளை புதுச்சேரியில் ஒரு பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு:
அதிகப்படியான மக்கள் கூட்டம் கூடும் என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கருதி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்குத் தேவையான அனுமதியை புதுச்சேரி காவல்துறையால் மறுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிச. 9 பொதுக்கூட்டம்..?
ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெக தலைமை உடனடியாக மாற்றுத் திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 9-ஆம் தேதி புதுச்சேரியின் மையப்பகுதியான உப்பளம் துறைமுக மைதானத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த தமிழக வெற்றி கழகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடைத்தால், அதில் விஜய் கலந்து கொண்டு தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.