தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய், வரும் டிசம்பர் 9-ம் தேதி புதுச்சேரியில் நடத்தவிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. எனினும், பாதுகாப்பு மற்றும் நெரிசலைக் கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளுடன் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளைத் தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு வரும் மக்களிடையே நெரிசல் அல்லது சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, புதுச்சேரி காவல்துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தைப் பாதுகாக்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி, QR கோடு மூலம் அனுமதி, முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கூட்டத்திற்கு வருவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல கடுமையான நிபந்தனைகளையும் புதுச்சேரி காவல்துறை விதித்துள்ளது.
முன்னதாக, நடிகர் விஜய் புதுச்சேரியில் சாலைப் பேரணி (Road Show) நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி சாலைப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி கோரப்பட்டதால், தற்போது நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டம், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.