மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மிகவும் ஆபத்தானவர் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேற்குவங்கத்தில் உள்ள 1.5 கோடி தகுதியான வாக்காளர்களின் பெயர்களை நீக்க ஒன்றிய அரசும், இந்தியத் தேர்தல் ஆணையமும் கூட்டுச் சதி செய்துள்ளதாகவும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
நதியா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR – Special Intensive Revision) பணியை கடுமையாகச் சாடினார்.
சதித் திட்டத்தின் பின்னணி :
“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மிகவும் ஆபத்தானவர். 2026 தேர்தலுக்கு முன்னதாக, ‘எஸ்.ஐ.ஆர்.’ திட்டத்தைப் பயன்படுத்தி 1.5 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்க ஒன்றிய அரசும், தேர்தல் ஆணைய அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர்.” “அமித் ஷா ஆபத்தானவர் என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால், மேற்குவங்கத்தை எப்படியாவது கைப்பற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்வார். மக்களை வாக்குரிமை இன்றி ஆக்குவது அவரது சதி.”
வாக்காளர் நீக்கப் பணிகளை கண்காணிக்கவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு (DM) அழுத்தம் கொடுக்கவும் டெல்லியில் இருந்து பா.ஜ.க.வினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
நீக்கப்பட்டால் போராட்டம் :
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள ஒருவரின் பெயர் நீக்கப்பட்டால் கூட தான் ஓயமாட்டேன் என்று மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். “தகுதியுள்ள ஒரு வாக்காளரின் பெயர் கூட வேண்டுமென்றே நீக்கப்பட்டால், நான் தொடர் தர்ணா போராட்டம் நடத்துவேன்” என்றும் அவர் எச்சரித்தார்.
மேற்குவங்கத்தில் தற்போது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், மம்தா பானர்ஜியின் இந்த அதிரடியான குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.