சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் சிகிச்சையில் உலக அளவில் புகழ்பெற்ற டென்மார்க்கை சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் (Novo Nordisk) நிறுவனம், தனது ‘பிளாக்பஸ்டர்’ மருந்தான ஒசம்பிக் (Ozempic)-ஐ தற்போது இந்தியாவிலும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
டைப்-2 நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவும் இந்த மருந்து, இந்திய மருத்துவ உலகில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
விலை நிர்ணயம்:
வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் ஊசி மருந்தாக (Once-weekly injection) ஒசம்பிக் அறிமுகமாகிறது. இதன் ஆரம்ப விலை நிர்ணய விவரங்களை நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
0.25 mg (ஆரம்ப அளவு) ஒரு வாரத்திற்கான விலை₹2,200, ஒரு மாதத்திற்கான விலை ₹8,8000. 0.5 mg ஒரு வாரத்திற்கான விலை₹2,542, ஒரு மாதத்திற்கான விலை₹10,170.
1 mg (அதிகபட்ச அளவு) ஒரு வாரத்திற்கான விலை₹2,794, ஒரு மாதத்திற்கான விலை₹11,175 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
”ஒசம்பிக்” எப்படி வேலை செய்கிறது? :
செமாக்ளூடைட் (Semaglutide) என்ற செயலில் உள்ள மூலப்பொருளைக் கொண்ட ஒசம்பிக், உடலில் இயற்கையாக சுரக்கும் GLP-1 என்ற ஹார்மோனைப் போல செயல்படுகிறது.
இது இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது மட்டும் இன்சுலின் வெளியீட்டைத் தூண்டி, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மிக முக்கியமாக, இது பசியைக் குறைக்கிறது மற்றும் வயிற்றில் உணவு செரிமானம் ஆவதை தாமதப்படுத்துகிறது.
இதனால், நோயாளிகள் குறைவான உணவை எடுத்துக்கொள்வதால், உடல் எடையும் குறையத் தொடங்குகிறது (சர்க்கரை நோயாளிகளுக்கு 8 கிலோ வரை எடைக் குறைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன).
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான டைப்-2 நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நேரத்தில் ஒசம்பிக் அறிமுகப்படுத்தப்படுவது, எடை இழப்பு மற்றும் நீரிழிவு மேலாண்மைக்கான சிகிச்சையில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருந்து குறித்த மேலும் தகவல்களை அறிய, உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.