தூக்கத்தில் வந்தது எமன் அல்ல.. மகன்கள் ஏவிய பாம்பு.. மகன்களின் பகீர் கொலைத் திட்டம்

திரைப்பட பாணயில் நடந்த கொடூரம்..3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காகப் பெற்ற தந்தையை ‘விஷப் பாம்பால்’ கடிக்க வைத்துக் கொன்ற மகன்கள்..

தமிழகத்தையே உலுக்கியுள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், 3 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை மற்றும் வாரிசு அடிப்படையிலான அரசு வேலைக்காக, பள்ளி ஆய்வக உதவியாளராக இருந்த தன் தந்தையைத் திட்டமிட்டு விஷப் பாம்பைக் கடிக்க வைத்துக் கொன்ற இரண்டு மகன்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தவர் கணேசன் (56). கடந்த அக்டோபர் 22-ம் தேதி அதிகாலை, கணேசன் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது மகன் மோகன்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால், கணேசன் பெயரில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான காப்பீட்டுப் பாலிசிகள் (Insurance Policies) இருப்பதை அறிந்த காப்பீட்டு நிறுவனம், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

முதல் முயற்சி தோல்வி.. இரண்டாவது முறையாக ஸ்கெட்ச்:

வடமண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் மற்றும் திருவள்ளூர் எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது வெளியான தகவல்கள் போலீஸாரையே அதிர வைத்தன,

முதல் முயற்சி:
அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், மகன்கள் ஒரு நல்ல பாம்பை (Cobra) வரவழைத்துத் தந்தை கணேசனின் காலில் கடிக்க விட்டுள்ளனர். ஆனால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதால் கணேசன் உயிர் பிழைத்தார்.

இரண்டாவது முயற்சி:
முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இன்னும் வீரியமான விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை (Krait) ஏற்பாடு செய்தனர். அக்டோபர் 22 அதிகாலை, தந்தை தூங்கும்போது அவரது கழுத்திலேயே பாம்பைக் கடிக்க விட்டுள்ளனர். இம்முறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் காலதாமதம் செய்து, அவர் இறப்பதை உறுதி செய்துள்ளனர்.

சிக்கியது எப்படி?:

விசாரணையில், கணேசன் குடும்பத்தினர் வாங்கிய பல கடன்களை அடைக்கவும், சொகுசாக வாழவும் இந்தத் திட்டத்தைத் தீட்டியது தெரியவந்தது. கணேசனின் மகன்கள் மோகன்ராஜ் (26) மற்றும் ஹரிஹரன் (27) ஆகியோர் தங்களது நண்பர் பாலாஜி மூலம் பாம்பு பிடிப்பவர்களைத் தொடர்பு கொண்டு 2 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளனர்.

அவர்களின் செல்போன் அழைப்புகள் மற்றும் வங்கிக் கணக்கு பரிமாற்றங்களை ஆய்வு செய்த போலீஸார், இந்தக் கொடூரக் கொலையை அம்பலப்படுத்தினர். மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பிரசாந்த், தினகரன், நவீன்குமார், பாலாஜி ஆகிய 6 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பணம் மற்றும் அரசு வேலை மீதான பேராசை, ஒரு மனிதனை எந்தக் கீழ்த்தரமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.

Leave a Comment