தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கருணாஸ், விஜய்யின் அரசியல் வருகை ஒரு தியாகம் அல்ல, அது ஒரு லாபகரமான வணிகத் திட்டம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
அரசியலுக்கு வருவது சம்பாதிக்கத்தான்:
மேடையில் உரையாற்றிய கருணாஸ், “விஜய் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அந்தப் பணத்தை விட்டுவிட்டு நான் மக்களுக்காக வருகிறேன் என்று அவர் சொல்கிறார். ஆனால், உண்மையில் அவர் அந்த 200 கோடியை விட்டுவிட்டு, அரசியலில் 2 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கவே வருகிறார்” என்று காரசாரமாகப் பேசினார்.
மேலும், விஜய்யின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். “ஏற்கனவே அவரிடம் சுமார் 2000 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு பணம் வைத்திருக்கும் விஜய், அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் அந்தப் பணத்தை வைத்தே மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்யலாமே? அவர் ஏன் வர வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
“விஜய் ஒரு சங்கி” – கருணாஸின் பகீர் குற்றச்சாட்டு:
விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய கருணாஸ், விஜய்யை நேரடியாக ‘சங்கி’ என்று விமர்சித்தார். “இன்று விஜய்யே ஒரு சங்கிதான். அவர் யாருடைய பின்னணியில் செயல்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். தாமரை (பாஜக) வந்தால் தமிழ்நாடு நாசமாகிவிடும். கடல் தாமரை வந்தால் குளம் அழியும், படர் தாமரை வந்தால் உடல் அழியும், ஆனால் பாஜக என்னும் தாமரை வந்தால் இந்த மாநிலமே அழிந்துவிடும்” என்று எச்சரித்தார்.
ஸ்டாலினுக்கு புகழாரம்:
விஜய்யைக் கடுமையாகச் சாடிய அதே வேளையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினார். “மக்களுக்காகத் தினந்தோறும் சிந்தித்துத் திட்டங்களைத் தீட்டும் ஸ்டாலின் தான் இந்தியாவின் சிறந்த முதல்வர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதையே மக்கள் விரும்புகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.