தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது சினிமா பயணத்திற்கு முழுநேர விடைபெற்றுவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், “இது வெறும் இடைவேளைதான், அவர் மீண்டும் வருவார்” என நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது கடைசி ஆடியோ லான்ச் இல்லை!
மலேசியாவில் நடைபெற்ற விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாதான் அவரது திரைப்பயணத்தின் கடைசி மேடை என ரசிகர்கள் கண்ணீர் மல்கப் பேசி வருகின்றனர். இது குறித்துப் பேசிய சாட்டை துரைமுருகன், “எல்லோரும் இதுதான் கடைசி ஆடியோ லான்ச் என்று தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சத்தியமாக அடித்துக் கூறுகிறேன், 2026 தேர்தலுக்குப் பிறகு கண்டிப்பாக ஒரு ஆடியோ லான்ச் நடக்கும்” எனப் பொறிபறக்கப் பேசியுள்ளார்.

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது!
விஜய்யின் கலை ஆர்வத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது. அந்தக் கால் ஆடத்தான் செய்யும். ரசிகர்கள் யாரும் ஃபீல் பண்ண வேண்டாம். இது ‘லாஸ்ட் செல்ஃபி’யோ, ‘லாஸ்ட் சென்ட் ஆஃப்’ பார்ட்டியோ கிடையாது” எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
அணில் குஞ்சுகளுக்காக வருவார்!
விஜய் தனது ரசிகர்களை ‘நண்பா, நண்பி’ எனக் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டிய துரைமுருகன், “ரசிகர்களுடைய அந்த குட்டி குஞ்சான் அணில் குஞ்சுகள், தோழா, தோழி என அத்தனை பேருடைய கோரிக்கைகளையும் நிறைவேற்ற விஜய் கண்டிப்பாக மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார்” என்றார்.
விஜய் தனது 69-வது படத்திற்குப் பிறகு அரசியலில் முழுமையாக இறங்குவதாகவும், இனி சினிமா கிடையாது என்றும் அறிவித்திருந்தார். ஆனால், அரசியல் களத்தில் அவருக்கு இருக்கும் சவால்கள் மற்றும் சினிமா மீது அவருக்கு இருக்கும் பிடிப்பை வைத்து சாட்டை துரைமுருகன் கூறியுள்ள இந்தக் கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருதரப்பு விவாதங்களையும் கிளப்பியுள்ளது.