எடப்பாடிக்கு ‘டாடா’… ஸ்டாலினுக்கு ‘வெல்கம்’!.. அதிமுக தொண்டர்களின் பிபியை எகிற வைக்கும் செல்லூர் ராஜுவின் “மெகா யூ-டர்ன்”..

அதிமுகவின் “நகைச்சுவை நாயகன்” என்று வர்ணிக்கப்படும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மீண்டும் ஒருமுறை தனது பேச்சால் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார். இம்முறை அவர் செய்திருப்பது சாதாரண காமெடி அல்ல, அதிமுக தொண்டர்களின் பிபியை எகிற வைக்கும் ரகமான “மெகா யூ-டர்ன்”.

ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும்!
2026 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, “உலக மக்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று ஆரம்பித்தார். ஆனால், ஓட்டத்தில் நாக்கு சறுக்கியதில், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் தமிழகத்துடைய முதலமைச்சராக வரவேண்டும்” என்று படு ஆவேசமாக ஒரு போடு போட்டார்.

திணறிய தொண்டர்கள்..தெறித்த நிர்வாகிகள்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக, தற்போதைய முதல்வர் ஸ்டாலினைப் புகழ்ந்து அவர் பேசியதும் அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் ஒரு நிமிடம் ‘ஸ்டேச்சு’ போல உறைந்து போயினர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்கள், “என்னது… நாம ஆளுங்கட்சிக்கு ஓட்டுப் போடப் போறோமா?” என்பது போல ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொண்டு திகைத்தனர்.

யார் அந்த முதல்வர்?
சற்று நேரத்திலேயே தனது தவறை உணர்ந்த செல்லூர் ராஜு, “அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று சொன்னேன்” எனச் சமாளித்தாலும், அதற்குள் அவரது ‘ஸ்டாலின் பாசம்’ இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவிவிட்டது.

ஏற்கனவே செங்கோட்டையன் விஜய்யைப் புகழ்ந்து தள்ளிவிட்டு ‘ஜம்ப்’ ஆகிவிட்டார். இப்போது செல்லூர் ராஜு, ஆளுங்கட்சித் தலைவரை வாழ்த்திப் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “அண்ணன் எப்பவும் இப்படித்தான், பாசத்துல யாருக்கு வேணா வாழ்த்து சொல்லிடுவாரு” என்று சில தொண்டர்கள் சமாளித்தாலும், திமுகவினர் இதைப் பயங்கரமாகத் தட்டி விட்டு நக்கல் அடித்து வருகின்றனர்.

Leave a Comment