“ஜனநாயகன்” ரிலீஸை தள்ளி வைக்கலாமே?.. தணிக்கை வழக்கில் அதிரடி காட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியான கேள்விகளை எழுப்பியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத உணர்வுகள் தொடர்பான புகார்:
இவ்வழக்கு இன்று நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜனநாயகன் படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், சர்ச்சைக்குரிய வகையிலும் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. இதனாலேயே சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி, படத்தைப் பற்றி வந்துள்ள அந்தப் புகார்களை உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

நீதிபதியின் சுவாரசியக் கேள்வி:
விசாரணையின் போது தயாரிப்பு நிறுவனத் தரப்பிடம் பேசிய நீதிபதி பி.டி.ஆஷா, படத்தின் ரிலீஸ் அவசரம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

“ஜனநாயகன் பட ரிலீஸை ஏன் ஜனவரி 10-ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கக்கூடாது? தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதுவரை காத்திருக்கலாமே? அதற்குள் தணிக்கை விவகாரங்களையும் பேசி முடித்துவிடலாமே?” எனச் சுவாரசியமாகவும், அதேசமயம் அழுத்தமாகவும் கேள்வி எழுப்பினார்.

நாளைக்கு ஒத்திவைப்பு:
இதற்கிடையே, தணிக்கை வாரியம் தாக்கல் செய்யும் புகார்களை ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

தவெக தலைவர் விஜய்யின் கடைசி படம் என்பதால், ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களிடையே நீதிமன்றத்தின் இந்தக் கேள்விகள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. நாளை தணிக்கை வாரியம் சமர்ப்பிக்கப்போகும் புகார்களின் அடிப்படையில் தான் ‘ஜனநாயகன்’ படத்தின் எதிர்காலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment