ஹீரோவே வாயைத் திறக்கல.. மத்தவங்க பேசி என்ன பிரயோஜனம்?.. விஜய்யை வறுத்தெடுத்த சினேகன்!

தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கலில் சிக்கித் தவிப்பது ஒருபுறமிருக்க, அந்தப் படத்தில் நடித்த நடிகர் விஜய்யின் ‘மௌனம்’ இப்போது கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாடலாசிரியர் சினேகன் வெளிப்படையாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

என்னதான் நடக்குது ‘ஜனநாயகன்’ படத்துக்கு? விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) பிடிவாதத்தால் இன்னும் திரைக்கு வராமல் தவித்து வருகிறது. “விஜய்யின் அரசியல் வருகையைத் தடுக்கவே திட்டமிட்டு முட்டுக்கட்டை போடப்படுகிறது” என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

சினேகன் கிளப்பிய பூகம்பம்:
இந்தச் சிக்கல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல ஜாம்பவான்கள் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், படத்தின் நாயகனான விஜய்யோ இதுவரை இதுகுறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இதைத்தான் சினேகன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் சினேகன் கூறியதாவது,

“ஜனநாயகன் படத்திற்காக கமல் சார் உட்பட எல்லாரும் பேசிட்டாங்க. ஆனா, அந்தப் படத்துல நடிச்ச தம்பி விஜய் இதுவரைக்கும் வாயைத் திறக்கவே இல்லை. அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. படத்துல நடிச்சவருக்கே அக்கறை இல்லைங்கறப்போ, மத்தவங்க பேசி என்ன பிரயோஜனம்? அவரே பேசாதப்போ மத்தவங்க பேசுறது எல்லாம் வீண் தான்!”

வியூகமா? அலட்சியமா?
விஜய் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முழுநேர அரசியலில் இறங்கிவிட்டதால், சென்சார் போர்டுடன் நேரடியாக மோதுவது சட்ட ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் அமைதி காப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், “தன் படத்திற்காகப் போராடும் ரசிகர்களுக்காகவும், தயாரிப்பாளருக்காகவும் விஜய் ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாம்” என்பது சினேகன் போன்றவர்களின் வாதமாக இருக்கிறது.

கமல்ஹாசன் போன்ற சீனியர் நடிகர்கள் களத்தில் இறங்கி ஆதரவு தெரிவிக்கும் நிலையில், விஜய்யின் இந்த ‘சைலண்ட்’ மோட் சினேகனை மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலேயும் பலரையும் முணுமுணுக்க வைத்துள்ளது.

Leave a Comment