திமுக அரசு குடும்பத்தைப் பிரிச்சிருச்சு.. ஆண்கள் இலவச பயணம் திட்டத்திற்கு ராஜேந்திர பாலாஜி கொடுத்த புது விளக்கம்..

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள “ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம்” என்ற அதிரடி வாக்குறுதிக்கு, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது பாணியில் ஒரு கலகலப்பான விளக்கத்தை அளித்துள்ளார்.

குடும்பத்தைப் பிரித்த திமுக?
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, திமுக அரசின் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தைக் கடுமையாகச் சாடினார். அவர் பேசுகையில், “தற்போதுள்ள திமுக ஆட்சியில் பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் என்பதால், கணவன் ஒரு பேருந்திலும் மனைவி ஒரு பேருந்திலுமாகத் தனித்தனியாகப் பயணிக்கும் சூழல் உள்ளது. இதன் மூலம் ஒன்றாக இருந்த குடும்பங்களை திமுக அரசு பிரித்துவிட்டது” என்று குற்றம் சாட்டினார்.

ஜாலியாக ஊர் சுற்றலாம்!
அதிமுகவின் புதிய வாக்குறுதி குறித்து அவர் அளித்த விளக்கம் அங்கிருந்த தொண்டர்களிடையே பலத்த சிரிப்பலை ஏற்படுத்தியது. “எடப்பாடியார் ஏன் ஆண்களுக்கும் இலவச பயணம் என்று அறிவித்திருக்கிறார் தெரியுமா? இனி ஒரு ஆண் தனது மனைவியோடு அல்லது காதலியோடு எந்தச் செலவும் இல்லாமல் ஜாலியாகப் பேருந்தில் ஏறி ஊர் சுற்றலாம். காசு இல்லையே என்ற கவலை இல்லாமல் சினிமாவிற்குச் சென்று வரலாம். குடும்பத்தோடு ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் அண்ணன் எடப்பாடியாரின் நோக்கம்” என்று கலகலப்பாகத் தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகள்:

கடந்த ஜனவரி 17-ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முதற்கட்ட வாக்குறுதிகளில் இவை முக்கியமானவை, நகரப் பேருந்துகளில் ஆண்களும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும், வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.

ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “காதலியுடன் செல்லலாம்” என்று அவர் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் இந்தப் பேச்சு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment