தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல் வீரர்கள் கூட்டத்தில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் பாஜகவுடன் இணைத்து விஜய் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாரும் அடிமைதான்!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜய், தற்போதைய ஆளுங்கட்சியையும், முன்னாள் ஆளுங்கட்சியையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்தார். அவர் கூறியதாவது,
“தமிழ்நாட்டில் இதுக்கு முன்னாடி ஆட்சியில் இருந்த கட்சியும் (அதிமுக) பாஜகவுக்கு அடிமையாகத்தான் இருந்தாங்க. இப்போ இருக்கிற ஆளும் கட்சியும் (திமுக) மறைமுகமாக பாஜகவிடம் சரண்டர் ஆகியிருக்காங்க. அதிமுக நேரடி சரண் என்றால், திமுக மறைமுக சரண்!”
வேஷம் கலைஞ்சிடக் கூடாதுன்னு கலர் கலரா அறிவிப்பு!
திமுக அரசின் செயல்பாடுகளைச் சாடிய விஜய், “அவர்களுடைய உண்மையான முகம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, தினமும் கலர் கலரா புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால், அவர்களுடைய வேஷம் கலைந்துவிட்டது. மத்திய அரசுக்கு அடிபணிந்து போய்க்கொண்டே, வெளியில் மட்டும் எதிர்ப்பது போலக் காட்டிக்கொள்கிறார்கள்,” எனச் சீறினார்.
நான்கு முனைப் போட்டியில் விஜய்:
விஜய்யின் இந்தப் பேச்சு குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “விஜய் தன்னை பாஜக-விற்கு எதிரான மாற்றாகக் காட்டிக்கொள்ள முயல்வதோடு, திமுகவின் ‘பாஜக எதிர்ப்பு’ அரசியலையும் கேள்விக்குள்ளாக்குகிறார். இதன் மூலம் பாஜக எதிர்ப்பு வாக்குகளையும், திராவிடக் கட்சிகள் மீது அதிருப்தியில் உள்ள வாக்குகளையும் கவரத் திட்டமிடுகிறார்,” என்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், விஜய்யின் இந்தத் ‘டைரக்ட் அட்டாக்’ மற்ற கட்சிகளைப் பெரும் டென்ஷனில் ஆழ்த்தியுள்ளது.