தமிழக அரசியலில் விஜய் ஒரு அசைக்க முடியாத சக்தி என ஒருபுறமும், விஜய் ஒன்னுமே இல்லை, மீடியாக்கள் தான் அவரை பில்டப் செய்கின்றனர் என இன்னொரு புறமும் விஜய்யின் அரசியல் குறித்து விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் அதிமுகவினரின் ஆக்ரோஷமான சமூக வலைத்தள பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும், தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதும் டெல்லி மேலிடத்துடன் கையாண்ட விதத்தை அவர்கள் பெருமையாக குறிப்பிடுகின்றனர். “டெல்லி மேலிடத்தையே தனது அரசியல் சாதுர்யத்தால் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வல்லமை கொண்டவர் நமது எடப்பாடியார்” என்று பதிவிடும் தொண்டர்கள், அவருக்கு முன்னால் அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாத விஜய் ஒரு பொருட்டே அல்ல என்ற கருத்தை முன்வைக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியின் நீண்டகால அரசியல் அனுபவமும், இக்கட்டான சூழல்களை அவர் கையாண்ட விதமும் விஜய்க்கு ஒருபோதும் வராது என்பதே அவர்களின் வாதமாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு அடுத்த் சக்தியாக இருந்த சசிகலாவையும், அதிகாரம் மிக்க தினகரனையும் கட்சியில் இருந்தே விரட்டியவர் எங்கள் எடப்பாடியார் என்றும் அந்த பதிவுகள் புகழ்ந்து வருகின்றன.
மேலும், விஜய்யின் அரசியல் வருகையை ஒரு “பயந்தாங்கொள்ளித் தனமான” அணுகுமுறையாகவே அதிமுகவினர் சித்தரிக்கின்றனர். வருமான வரித்துறை சோதனைகள் அல்லது மத்திய அரசின் இதர நெருக்கடிகள், ஜனநாயகன் படத்திற்கான பிரச்சனை ஆகியவை வரும்போது விஜய் அமைதியாகிவிடுவதை சுட்டிக்காட்டும் இவர்கள், அத்தகைய ஒருவரை நம்பி எப்படி ஒரு பெரிய அரசியல் கூட்டணியை அமைக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு தலைவன் என்பவன் எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் களத்தில் நிற்க வேண்டும், ஆனால் விஜய் ஒவ்வொரு முறையும் திரைமறைவு சமரசங்களுக்கு போவதாகவும், இது தொண்டர்களை காட்டிக்கொடுக்கும் செயல் என்றும் அதிமுகவினர் மிக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கூட்டணி குறித்த விவாதங்களிலும் அதிமுகவினர் மிகவும் கறாரான போக்கை கடைப்பிடிக்கின்றனர். “அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்; இதற்கு யாருடைய தயவும் தேவையில்லை, குறிப்பாக ஒரு நடிகரின் தயவு தேவையே இல்லை” என்பது அவர்களின் நிலைப்பாடாக உள்ளது. விஜய்யை ஒரு பெரிய சக்தியாக ஊடகங்கள் முன்னிறுத்துவதை அவர்கள் இளக்காரமாக பார்க்கின்றனர். ஏற்கனவே பல நடிகர்களை பார்த்த தமிழக அரசியல், விஜய்யையும் ஒரு சில ஆண்டுகளில் மறந்துவிடும் என்றும், அதனால் அவரை தூக்கிப் பிடிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது. விஜய்யை வளர்த்துவிடுவது என்பது அதிமுக சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது போன்றது என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
சமீபகாலமாக அதிமுக மற்றும் தவெக இடையே நிலவி வரும் இந்த “நிழல் யுத்தம்” வெறும் வார்த்தை போராக மட்டும் இல்லாமல், ஒரு கொள்கை ரீதியான மோதலாகவும் உருவெடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு சாதாரண தொண்டனாக இருந்து உயரிய பதவிகளை அடைந்தவர், ஆனால் விஜய் தனது ரசிகர் மன்ற பலத்தை வைத்துக்கொண்டு குறுக்கு வழியில் அதிகாரத்தை பிடிக்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த ஒப்பீடு அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் எடப்பாடியார் மீதான மதிப்பை கூட்டுவதோடு, விஜய்யின் அரசியல் நுழைவை ஒரு பலவீனமான முயற்சியாகவே பார்க்க தூண்டுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், 2026 தேர்தல் களம் என்பது கொள்கைக்கும் கவர்ச்சிக்கும் இடையிலான ஒரு போராட்டமாக மாறப்போகிறது என்பதை அதிமுகவினரின் இந்த பதிவுகள் உணர்த்துகின்றன. டெல்லி மேலிடத்தை கண்டு அஞ்சாத, துணிச்சலான தலைமை எடப்பாடி பழனிசாமி என்பதால், அவருடன் விஜய்யை ஒப்பிடுவதே தவறு என்பது அதிமுக தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இந்த இணையதள போர் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் தீவிரமடையும் என்பதில் சந்தேகமில்லை. விஜய்யின் அரசியல் எதிர்காலம் அவர் இந்த விமர்சனங்களை எப்படி கையாள்கிறார் என்பதில் தான் அடங்கியிருக்கிறது.