Cricket
13 ரன்கள் கிடைக்குமா? தனது 500-வது போட்டியில் சதத்தை எதிர்நோக்கும் கோலி..!
சர்வதேச கிரிக்கெட்டில் தனது 500 ஆவது போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி சதத்தை நெருங்கி வருகிறார். வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்-இல் இந்கி. அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது.
கேப்டன் ரோகித் ஷர்மா 143 பந்துகளில் 80 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 57 ரன்களை குவித்து தனது விக்கெட்-ஐ இழந்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட்களை இழந்து 288 ரன்களை குவித்துள்ளது.
தனது 500 ஆவது போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி 161 பந்துகளில் 87 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 84 பந்துகளில் 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி செஷனில் மட்டும் இந்திய அணி 33.2 ஓவர்களை விளையாடி, விக்கெட் எதுவும் இழக்காமல் 106 ரன்களை குவித்தது.
13 ரன்களை எடுத்தால் சதம் என்ற நிலையில், களத்தில் இருக்கிறார் விராட் கோலி. இன்று நடைபெறும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடிக்கும் பட்சத்தில், டிசம்பர் 2018 ஆண்டில் இருந்து வெளிநாடுகளில் நடைபெற்ற சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் முதல் சதமாக இருக்கும்.
முதல் நாள் ஆட்டத்தில் விராட் கோலி அடித்த அதிக சிக்ஸ் மற்றும் பவுன்டரிகள் ஆஃப் சைடிலேயே பறந்தது. விராட் கோலி மட்டுமின்றி ரவீந்திர ஜடேஜாவும் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி நேற்றைய ஆட்டத்தின் முதல் செஷனில் அதிவேகமாக ரன்களை குவித்தது. மதிய வேளையில் 24.4 ஓவர்களில் இந்திய அணி 61 ரன்களை குவித்தது.
தேநீர் இடைவெளியை ஒட்டி கேப்டன் ரோகித் ஷர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் அஜிங்கியா ரகானே தங்களது விக்கெட்டை இழந்தனர். வெஸ்ட் இன்டீஸ் சார்பில் கெமர் ரோச், ஷனோன் கேப்ரியல், ஜேமியல் வேரிகன் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.