Cricket
எம்.எஸ். டோனிக்கும் ஜடேஜாவுக்கும் சண்டையா? உண்மையை போட்டு உடைத்த அம்பதி ராயுடு!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பை வென்ற சம்பவம் பலருக்கும் மறக்க முடியாத நினைவாக இருக்கும். இறுதி போட்டியில் எம்.எஸ். டோனியின் எமோஷனல் செயல்பாடுகள், கடைசி பந்தில் ரவீந்திர ஜடேஜா வெற்றியை பறித்து கொடுத்ததை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.
வெற்றிக்கு பிறகு எம்.எஸ். டோனி ஜடேஜாவை தூக்கி வைத்து கொண்டாடியது, ஐ.பி.எல். கோப்பையை ஜடேஜா மற்றும் அம்பதி ராயுடுவை பெற்றுக் கொள்ள செய்தது சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு நீங்கா நினைவுகளை ஏற்படுத்தி இருக்கும். ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி மற்றும் ஜடேஜா கூட்டணி பல்வேறு சம்பவங்களை நிகழ்த்தி இருக்கிறது.
அந்த வகையில், 2022 ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணி கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. தொடர் சரியாக அமையாத காரணத்தால், தொடரின் நடுவிலேயே எம்.எஸ். டோனி மீண்டும் சி.எஸ்.கே. கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சம்பவம் காரணமாக பலரும், எம்.எஸ். டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று நினைக்க செய்தது.
மேலும் இதுபற்றி ஏராளமான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்தது. எனினும், எம்.எஸ். டோனி தான் தனக்கு உத்வேகமாக இருந்து வந்துள்ளார் என்று ரவீந்திர ஜடேஜா பலமுறை தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு எம்.எஸ். டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையேயான உறவு குறித்து புதிய தகவல் தெரிவித்து இருக்கிறார்.
2023 ஐ.பி.எல். தொடரோடு தனது ஓய்வை அறிவித்த அம்பதி ராயுடு, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எம்.எஸ். டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக வெளியாகும் தகவல் பற்றிய உண்மை என்னவென்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அம்பதி ராயுடு கூறியதாவது..,
“முந்தைய ஐ.பி.எல். தொடரின் போது ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு, பிறகு அந்த பொறுப்பு எம்.எஸ். டோனியிடம் மீண்டும் வழங்கப்பட்டது. எம்.எஸ். டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக குழப்பம் நிலவியது. ஆனால், இந்த ஐ.பி.எல். தொடரை பார்க்கும் போதும், இறுதி போட்டிக்கு பிறகு நடந்த சம்பவங்களும், இருவர் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறது.”
“எம்.எஸ். டோனியுடன் ரவீந்திர ஜடேஜா கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் என்று நான் நினைக்கவில்லை. அதில் உண்மை இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. அணி சிறப்பாக செயல்படவில்லை என்று ஜடேஜா கவலையுடன் இருந்தார். அந்த ஆண்டு அனைவரின் செயல்பாடுகளும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.”
“ஜடேஜாவுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்ததாக தெரியவில்லை. அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்கள் காரணமாக அவருக்கு மன ரீதியில் ஓய்வு தேவைப்பட்டது. இதை தவிர கருத்து வேறுபாடு இருந்ததாக நான் நினைக்கவில்லை. அடுத்த சீசன் எப்படி இருக்கும் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது,” என்று தெரிவித்தார்.