Cricket
எப்பவும் இதை தான் சாப்பிடுவேன்!.. இதை மட்டும் தான் வாங்கவும் முடிந்தது..ஹர்திக் பான்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் உச்ச நட்சத்திரமாக ஹர்திக் பான்டியா விளங்கி வருகிறார். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் ஆல்-ரவுன்டர்கள் அதிகம் பேர் இல்லை. மேலும் எந்த சூழலிலும் ஆட்டத்தின் போக்கை, அதிரடி பேட்டிங்கால் மாற்றும் வல்லமை பலருக்கு இல்லை. அந்த வகையில், இரு செயல்பாடுகளிலும் ஹர்திக் பான்டியா போட்டியில் வெற்றி பெற செய்வதில் சிறந்து விளங்குகிறார்.
2015 ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பான்டியாவை ரூ. 10 லட்சம் என்ற ஆரம்ப விலைக்கே ஏலத்தில் எடுத்தது. பேட்டிங் மற்றும் பவுலிங் என்று தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வந்த ஹர்திக் பான்டியா இந்திய அணியில் இடம்பிடித்து, தவிர்க்க முடியாத வீரராக மாறினார்.
2022 ஐ.பி.எல். தொடருக்கு முன் ஹர்திக் பான்டியாவை குஜராத் டைட்டனஸ் அணி ரூ. 15 கோடி கொடுத்து அணியில் சேர்த்துக் கொண்டது. தற்போதைய இந்திய வீரர்களில் பணக்கார வீரராக 29 வயது ஹர்திக் பான்டியா உள்ளார். எனினும், இவரது ஆரம்பகட்ட வாழ்க்கை இவ்வளவு செல்வம் மிக்கதாக இல்லை.
இதன் காரணமாக பல சமயங்களில் மேகி மட்டும் சாப்பிட்டுக் கொண்டு உயிர் வாழ்ந்து வந்ததாக ஹர்திக் பான்டியா தெரிவித்து இருக்கிறார். தனது குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபராக தந்தை இருந்ததாகவும், அவருக்கு மிக குறுகிய காலக்கட்டத்தில் அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக குடும்பத்தின் நிதி நிலைமை மேலும் மோசம் அடைந்துள்ளது. இது குறித்து தனியார் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது..,
“எனது டயட் வெறும் மேகி மட்டுமாகவே இருந்தது. எனக்கு மேகி அதிகம் பிடித்திருந்தது, மேலும் அந்த சூழலும் அதற்கு மட்டும் தான் உகந்ததாக இருந்தது. இதன் காரணமாக மேகியை மட்டுமே இரவும், பகலும் உண்டு வந்தேன். வீட்டில் என் தந்தை மட்டுமே வருமானம் ஈட்டி வந்தார். ஒரே இரவில் அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது.”
“பிறகு, ஆறு மாதங்கள் கழித்து அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது, நல்ல வேளையாக நாங்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனை சென்றோம். அப்போது தான் குடும்பத்தில் நிதி சிக்கல்கள் ஏற்பட துவங்கியது. எங்களிடம் சேமிப்பு என்று எதுவும் இல்லை, நாங்கள் ஈட்டியதை விட அதிகளவில் செலவிட்டு வந்தோம்,” என்று தெரிவித்தார்.