Cricket
நீ ஒன்றும் டோனி கிடையாது.. இஷான் கிஷானை கலாய்த்த முன்னாள் வீரர்..!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் இஷான் கிஷன் வெஸ்ட் இன்டீஸ் சுற்றுப்பயணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இஷான் கிஷன் அரைசதம் அடித்து, ஒரே தொடரின் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.
ஏற்கனவே இந்த பட்டியலில் எம்.எஸ். டோனி, திலீப் வெங்சர்கார், முகமது அசாருதீன் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த வரிசையில் புதிதாக இணைந்து இருக்கும் இந்திய வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்று இருக்கிறார். இவர் போட்டியின் நிடுவே மேற்கொண்ட உரையாடல் மற்றும் ரியாக்ஷன் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா போட்டியின் போது கமென்ட்ரி செய்து கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட ஸ்டம்பிங் ஒன்றுக்கு ஆகாஷ் சோப்ரா டைமிங்கில் இஷான் கிஷனை வறுத்தெடுத்தார். இதற்கு இஷான் கிஷன் அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கமென்ட்ரி செய்து கொண்டிருந்த ஆகாஷ் சோப்ரா கூறியதாவது, “ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட் தொடர்பான விக்கெட்களை கேட்பதற்கு அப்பீல் செய்வது மிகவும் அரிதான காரியம். இதுவரையில், நான் வீரரின் கால் தரையில் இருப்பதை நன்றாக பார்க்கிறேன். நீங்கள் ராஞ்சியில் இருந்து வரலாம், ஆனால் உங்கள் பெயர் ஒன்றும் எம்.எஸ். டோனி கிடையாது,” என்று தெரிவித்தார்.
இந்த கமென்ட்-ஐ அவர் கூறுகிறார் என்று இஷான் கிஷன் கேட்டுவிட்டார். பிறகு, அதற்கு பதில் அளிக்கும் வகையில் அவர், “இருக்கட்டும் பரவாயில்லை” என்று தெரிவித்தார். இதை கேட்ட ஆகாஷ் சோப்ரா, அவருக்கு பதில் அளித்தார். அப்போது, “மிகவும் நல்லது இஷான், நாங்கள் உன்னை நேசிக்கிறோம்,” என்று சிரித்துக் கொண்டே கூறினார். இது தொடர்பான வீடியோவை ஆகாஷ் சோப்ராவே தனது X (முன்னதாக டுவிட்டர்) தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ஒருநாள் தொடரில் சீரிஸ் நாயகனாக அறிவிக்கப்பட்ட இஷான் கிஷன் அதற்கு பிறகு கூறியதாவது, “உண்மையில் அந்த போட்டி எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. நான் செட் ஆனதும், அதிக ரன்களை குவிக்க வேண்டிய சூழலில் இருந்தேன். அதைத் தான் எனது மூத்த வீரர்கள் என்னிடம் தெரிவித்தனர். நான் களத்தில் இருந்து, அதிக ரன்களை சேர்த்திருக்க வேண்டும்.
அதைத் தான் அடுத்த போட்டியில் நான் முயற்சிப்பேன். களத்தில் இருந்து கொண்டு, அதிக ரன்களை குவிக்க வேண்டும். இந்த கட்டத்தில் செட் ஆவது மிகவும் முக்கியமான விஷயம். கடந்த போட்டியை முழுமையாக மறந்துவிட்டு, மீண்டும் 0-இல் இருந்து ஆரம்பிக்க வேண்டியதும் முக்கியமான ஒன்று,” என தெரிவித்தார்.