Cricket
முகேஷ் குமார் 14 நாட்கள்ல செஞ்சத ஒருத்தர் அப்போவே முறியடிச்சிட்டாரு.. யார் தெரியுமா?
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் இந்திய அணியில் அறிமுகமான முகேஷ் குமார், வெஸ்ட் இன்டீஸ் சுற்றுப் பயணத்திலேயே இந்திய டெஸ்ட் அணி மட்டுமின்றி, ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அந்த வகையில், ஒரே தொடரின் போது அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அறிமுகமான இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை முகேஷ் குமார் பெற்றார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இடம்பிடித்து அசத்தினார். அந்த வகையில், ஒரே தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் அனைத்து வகை போட்டிகளிலும் இடம்பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை டி நடராஜன் பெற்று இருக்கிறார்.
தற்போதைய வெஸ்ட் இன்டீஸ் சுற்று பயணத்தில் இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் முகேஷ் குமார் ஜூலை 20 ஆம் தேதி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். இதைத் தொடர்ந்து ஜூலை 27 ஆம் தேதி வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். பிறகு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியின் மூலம் இந்திய டி20 அணியிலும் முகேஷ் குமார் இடம்பிடித்தார்.
அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகையான போட்டிகளிலும் வெறும் 14 நாட்களுக்குள் முகேஷ் குமார் அறிமுகமாகி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த காலக்கட்டத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் இடம்பிடித்த வீரர்கள் பட்டியலிலும் முகேஷ் குமார் இரண்டாவது இடத்திலேயே இருக்கிறார். இவருக்கு வயது 29 ஆகும்.
அந்த வகையில், குறைந்த காலக்கட்டத்தில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்த முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணியை சேர்ந்த பீட்டர் இன்கிராம் படைத்து இருக்கிறார். இவர் இந்த சாதனையை 2010 ஆம் ஆண்டிலேயே மேற்கொண்டு இருக்கிறார்.
2010 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் போது, பிப்ரவரி 3 ஆம் தேதி டி20 போட்டியிலும், பிப்ரவரி 5 ஆம் தேதி ஒருநாள் போட்டியிலும், பிப்ரவரி 15 ஆம் தேதி டெஸ்ட் அணியிலும் பீட்டர் இன்கிராம் இடம்பிடித்து அசத்தினார். அந்த வகையில் 12 நாட்களிலேயே நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அனைத்து வகை போட்டிக்கான அணிகளிலும் பீட்டர் இன்கிராம் இடம்பிடித்து விட்டார். நியூசிலாந்து அணியில் இடம்பிடித்த போது பீட்டர் இன்கிராமின் வயது 31 ஆகும்.
பீட்டர் இன்கிராம் மற்றும் முகேஷ் குமார் தவிர பாகிஸ்தான் அணியின் இசாஸ் சீமா மற்றும் சிம்பாப்வே அணியின் டியன் மேயர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிக்கான அணிகளில் தேர்வாக 15 நாட்களை எடுத்துக் கொண்டனர். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கைல் அபாட் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர் 16 நாட்களில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பிடித்து அசத்தினார்.