tech news
ஆப்பிள் வாட்ச் அணிந்த சிங்கம்.. கால்நடை மருத்துவரின் புது விளக்கம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் சிங்கத்தின் நாக்கில் ஆப்பிள் வாட்ச்-ஐ கட்டி அதன் இதய துடிப்பை அறிந்து கொள்கின்றனர். இது தொடர்பான தகவலை பிரபல வனவிலங்கு கால்நடை மருத்துவர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள். ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும் பல்வேறு சாதனங்களை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் கொண்டு வந்த அம்சம் தான் Heart Rate Monitoring, அதாவது ஒருவரின் இதய துடிப்பை கண்காணிக்கும் வசதி.
இந்த வசதி மூலம் ஒருவரின் இதய துடிப்பு சீராக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும். இதய துடிப்பு சீரற்ற நிலைக்கு செல்லும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று பயனருக்கு எச்சரிக்கை செய்யும்.
மனிதர்களை தாண்டி விலங்குகளின் இதய துடிப்பை ஆப்பிள் வாட்ச் மூலம் கண்காணிக்க ஆஸ்திரேலிய வனவிலங்கு கால்நடை மருத்துவர் சோலே புய்டிங் முடிவு செய்தார். இந்த முயற்சியின் அங்கமாக சிங்கம் ஒன்றின் நாக்கில் ஆப்பிள் வாட்ச்-ஐ கட்டி அதன் இதய துடிப்பை அறிந்து கொண்டார். இவ்வாறு செய்யும் முன் சிங்கத்தை மயக்க நிலைக்கு கொண்டு சென்றார்.
ஆப்பிள் வாட்ச்-ஐ விலங்குகளில் பயன்படுத்தும் முறையை, பிரபல வனவிலங்கு மற்றும் கால்நடை பாதுகாப்பு மருத்துவர் பாபியோலா குசேடாவிடம் இருந்து கற்று கொண்டதாக புய்டிங் தெரிவித்தார். முன்னதாக பாபியோலா யானையின் காதில் ஆப்பிள் வாட்ச்-ஐ கட்டி அதன் இதய துடிப்பை கண்டறிந்தார்.
இந்த வழிமுறையை கொண்டு உலகில் ஆபத்தை ஏற்படுத்தும் வன விலங்குகளின் இதய துடிப்பை எவ்வித சவாலும் இன்றி சுலபமாக கண்டறிய முடியும்.