latest news
கழிவறை பக்கமே செல்ல முடியாத மக்கள்… விஷவாயுவால் அச்சத்தில் புதுவை… என்ன நடந்தது?
Pondicherry: புதுவையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் அப்பகுதியில் அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து அங்குள்ள மக்களின் அன்றாட வேலைகள் கூட பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
புதுவையை சேர்ந்த ரெட்டியார் பாளையத்தினை சேர்ந்த சிறுமி செல்வராணி(15), மூதாட்டி செந்தாமரை, மகள் காமாட்சி ஆகியோர் கழிவறைக்குள் பரவிய விஷவாயுவால் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, உடற்கூராய்வு முடித்த பின்னர் சிறுமி உடல் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்யப்பட்டது.
செந்தாமரை மற்றும் அவர் மகள் உடல் அவர்களின் வழக்கப்படி பவழக்காரன்சாவடி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இது அப்பகுதி மக்களை பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பிரச்னையால் அப்பகுதியில் இருக்கும் மக்களை சமைக்க வேண்டாம் எனவும், சுற்றி இருக்கும் இரண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 17ந் தேதி வரை விடுமுறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தற்போது மீண்டும் ஒரு பெண் கதிர்காமம் மருத்துவமனையில் விஷவாயு தாக்கி அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மக்களின் அச்சத்தினை போக்கும் பொருட்டு உடனடியாக கழிவுநீர் வாய்க்கால் நிலையத்தினை சுத்தம் செய்யும் ஒப்பந்தக்காரரை நீக்கிவிட்டு லாஸ்பேட்டை கழிவுநீர் ஒப்பந்தக்காரரை நியமித்து சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
மூவரின் இழப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகிறது. ரெட்டியார்பாளையத்தின் காவல்துறையில் இந்த மூவரின் மரணம் குறித்து சந்தேகத்துக்கு இடமாக இருப்பதாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே இதுகுறித்து இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியும் எனவும் பேச்சுகள் எழுந்து இருக்கிறது. தற்போது அப்பகுதி மக்கள் கழிவறை கூட செல்லாமல் பயத்தில் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என் ஃப்ரண்டை போல யாரு மச்சான்… யானைகளின் விநோத செல்லப்பெயர் பழக்கம்!