latest news
மீண்டும் மீண்டுமா… இரண்டாவது முறையாக ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்த வேட்பாளர்!
தமிழகத்தில் பல்வேறு ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ல் நடைபெற்றது. 3,088 வாக்குகள் அடங்கிய தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரன், முரளி மனோகர் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர். இதில், முரளி மனோகர் பெற்றிருந்த 1,070 வாக்குகளை விட ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றிருந்த ராஜேஸ்வரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருந்த முரளி மனோகர், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊராட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்றோ தலைமையில் மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையில் ராஜேஸ்வரன் 1,069 வாக்குகளும், முரளி மனோகர் 1068 வாக்குகளும் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால், காயாமொழி ஊராட்சித் தலைவராக ராஜேஸ்வரன் இரண்டாவது முறையாக ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்.