latest news
8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 16 வருடம் கழித்து கிடைத்த நீதி… என்ன நடந்தது தெரியுமா?
அவிநாசியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கின் தீர்ப்பு 16 வருடம் கழித்து வந்து இருக்கிறது. இதில் வட்டாட்சியராக இருந்தவரின் தண்டனை குறித்த தகவலும் வெளியிடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூரின் பிஎன் சாலையை சேர்ந்தவர் மாரப்பன். இவருக்கு தண்டபாணி, மேகநாதன் என இரு மகன்கள் உள்ளனர். மாரப்பன் தன்னுடைய சொந்த நிலமான ராக்கியாபாளைய இடத்தினை மகன்களுக்கு பிரித்து கொடுத்து இருக்கிறார். அந்த நிலத்துக்கு மகன்கள் இருவரும் பட்டா வாங்க சென்றுள்ளனர்.
அங்கு அவிநாசி வட்டாட்சியர் அலுவலத்தில் துணை வட்டாட்சியராக இருந்தவர் பாலசுப்ரமணியம். அவர் பட்டாவை வழங்க 8 ஆயிரம் லஞ்சமாக கேட்டு இருக்கிறார். இதனால் தண்டபாணி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பாலசுப்ரமணியத்தினை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்றது. 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடந்த வழக்கில் பாலசுப்ரமணியன் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து குற்றவாளி என அவர் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.