Cricket
19 பந்துகளில் ஓமனை சிதைத்த இங்கிலாந்து… சூப்பர் 8 வாய்ப்பு எப்படி?
ஓமனுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை முக்கியமான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஸ்காட்லாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டு போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்றது இங்கிலாந்தின் சூப்பர் 8 வாய்ப்பை மங்கச் செய்திருந்தது. அதேநேரம், தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்கிற நிலையில், ஆண்டிகுவா மைதானத்தில் ஓமன் அணியைச் சந்தித்தது.
டாஸ் ஜெயித்து ஓமனை பேட் செய்ய அழைத்த இங்கிலாந்து, தொடக்கம் முதலே பௌலிங்கில் மிரட்டியது. பவர் பிளேவுக்குள்ளேயே ஓமனின் 4 விக்கெட்டுகளை ஆர்ச்சர், மார்க் வுட் காலி செய்ய, மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்டர்களை சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷீத் காலி செய்யவே ஓமன் அணி 13.2 ஓவர்களில் 47 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 48 ரன் இலக்கை 19 பந்துகளில் சேஸ் செய்து ரன் ரேட்டை பூஸ்ட் செய்து கொண்டது.
இதன்மூலம் 2.164 என்கிற ஸ்காட்லாந்தின் ரன்ரேட்டைத் தாண்டி 3.081 என்ற ஆரோக்கியமான ரன் ரேட்டை இங்கிலாந்து பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவுடனான அடுத்த போட்டியில் ஸ்காட்லாந்து தோல்வியடைந்தால், இங்கிலாந்து எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அதேநேரம், ஆஸ்திரேலியாவுக்கு ஸ்காட்லாந்து அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நிலையில், இங்கிலாந்தின் கனவு தகர்க்கப்படும்.