latest news
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்… களைகட்டாத தேர்தல் களம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியிருக்கிறது. ஜூலை 10-ல் நடக்கும் தேர்தலுக்கு திமுக மட்டுமே வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் களம் களைகட்டாத நிலையே இருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மறைந்தார். இதையடுத்து, ஏப்ரல் 8-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தநிலையில், விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக அன்னியூர் சிவா என்பவரை அறிவித்து திமுக தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது. வேட்புமனுத் தாக்கல் இன்று (ஜூன் 14) தொடங்கியது. ஜூன் 21-ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கலுக்கான அவகாசம் இருக்கும் நிலையில், ஜூன் 24-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 26. இதையடுத்து ஜூலை 10-ம் தேதி பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு ஜூலை 13-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக தவிர மற்ற கட்சிகள் இதுவரை வேட்பாளரை அறிவிக்காத நிலையில், தேர்தல் களம் சுணக்கம் கண்டிருக்கிறது. இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `அதிமுக வாக்குகள் சரிந்துவிட்டதாகக் கூறுவது உண்மையில்லை; அதிமுக வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்’ என்று கூறியிருந்தார்.
மறுபுறம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் பாமக போட்டியிடவே அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கு பாஜக தரப்பிலும் சம்மதம் கிடைத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். இதனால், விக்கிரவாண்டியில் இருமுனைப் போட்டியா, மும்முனைப் போட்டியா என்கிற கேள்விக்கான விடை அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: அமித் ஷா இதைத்தான் சொன்னார்… தமிழிசை கொடுத்த அடடே விளக்கம்!