Connect with us

Cricket

`எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தேல’ – தென்னாப்பிரிக்காவுக்கு மரண பயம் காட்டிய நேபாளம்!

Published

on

நேபாளத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

வெஸ்ட் இண்டீஸின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நேபாள அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்க வீரர்கள் ரன் குவிக்கத் தடுமாறிய நிலையில், அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 43 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களும் எடுத்தனர். நேபாளம் தரப்பில் ஸ்பின்னர் குஷால் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

116 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய நேபாளம் அணி, மெதுவாக இலக்கை நோக்கி நடைபோட்டது. 15 ஓவர்கள் முடிவில் 91/3 என்று இருந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் நேபாளத்தின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவை என்ற சூழல். அந்த நிலையில், நேபாளம் இந்த உலகக் கோப்பையில் அடுத்த அப்செட்டை தென்னாப்பிரிக்காவுக்குப் பரிசளிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு.

கடைசி 5 ஓவர்களில் பந்துவீச்சில் மிரட்டினர் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள். குறிப்பாக இறுதி 3 ஓவர்களில் 18 ரன்கள் தேவை என்கிற நிலையில், 18வது ஓவரை வீசிய ஷம்ஸி 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து முக்கியமான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். 19வது ஓவரில் நோர்க்கியா 8 ரன் கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுக்க கடைசி ஓவரில் 8 ரன் நேபாளத்தின் வெற்றிக்குத் தேவைப்பட்டது.

முதல் 2 பந்துகள் டாட் பாலாக இருந்தாலும் அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 6 ரன் கிடைக்க, கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு ரன் தேவை என்கிற நிலை நேபாளத்துக்கு ஏற்பட்டது. ஐந்தாவது பந்தை டாட் பாலாக குல்ஷன் ஜா வீசினார். பரபரப்பான கடைசிப் பந்தில் பார்ட்மேன் ரன் அவுட்டாக ஒரு ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய தென்னாப்பிரிக்காவின் ஷம்ஸி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

google news