Connect with us

latest news

13 ஆண்டு கொள்கை முடிவிலிருந்து பின்வாங்கிய பாமக… காரணம் என்ன?

Published

on

இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்கிற தங்களில் கொள்கை முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கும் பாமக, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்திருக்கிறது.

பாமக இறுதியாகக் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தது. அந்தத் தேர்தலில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி இரண்டாமிடம் பிடித்திருந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்று அனைத்து கட்சிகளுமே அந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தன.

அதன்பிறகு நடைபெற்ற எந்தவொரு இடைத்தேர்தலிலுமே பாமக போட்டியிட்டதில்லை. `ஒரு எம்.எல்.ஏவால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது?’ – கடந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின்போது பாமக ஏன் போட்டியிடவில்லை என்கிற கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சொன்ன பதில் இது.

அதேபோல், `இடைத்தேர்தல் என்பது நேரம் , காலம், பொருளை எல்லாம் வீணடிக்கும் செயல். சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இல்லாமல் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மறைந்தால் அக்கட்சியை சேர்ந்த வேறு ஒருவரை நியமனம் செய்கிற வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். இதை பாமக தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது’’ என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின் தங்களின் கொள்கை முடிவிலிருந்து பின்வாங்கி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவதன் பின்னணியில் முக்கியமான காரணம் இருக்கிறது என்கிறார்கள். சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவின் வாக்கு சதவிகிதம் பெரிய அளவுக்கு அடிவாங்கியிருக்கிறது.

இதனால், தங்கள் கட்சி வலுவாக இருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாமக. இதனாலேயே இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள் பாட்டாளி சொந்தங்கள்.

இதையும் படிங்க: சூறையாடப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம்… சாதி மறுப்பு திருமணத்துக்கு இப்படியா?

google news