Cricket
கோலியை விடுங்க.. மிடில் ஆர்டர் செட் ஆகிடுச்சு அதை பாருங்க.. ஹர்பஜன் சிங்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் க்ரூப் A-வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 7 புள்ளிகளை பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்று இருந்தது.
இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற இருந்த போட்டியில் இந்திய அணி கனடா அணியை எதிர்கொள்ள இருந்தது. எனினும், மோசமான வானிலை காரணமாக இந்த போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்திய அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் கடைசி ஓவர் வரை கொண்டு சென்ற பிறகே வெற்றி பெற்றது.
மேலும், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மூன்று போட்டிகளிலும் சேர்த்தே 5 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதில் அயர்லாந்துக்கு எதிராக 1, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 ரன்கள் அடங்கும். அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். எனினும், தற்போது போட்டிகள் நடைபெறும் அமெரிக்க ஆடுகளம் மிகவும் மோசமாக இருப்பதாக களத்தில் விளையாடும் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் இருந்தே, பிட்ச்-ஐ சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், விராட் கோலியின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-இடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஹர்பஜன் சிங், “அந்த பிட்ச்-இல் பேட்டிங் மிகவும் கடினமாக இருந்தது, இதனால் அதை வைத்துக் கொண்டு ஒருவரை மதிப்பிட நான் விரும்பவில்லை. அங்கிருந்த சூழல் காரணமாகவே விராட் கோலியால் ரன் அடிக்க முடியாமல் போனது. அத்தகைய சூழலில் வைத்து ஒரு வீரரை உங்களால் மதிப்பிட முடியாது.”
“விராட் கோலியிடம் இருந்து ரன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. எனினும், முதல் ஆறு ஓவர்களில் நமக்கு சரியான பார்ட்னர்ஷிப்கள் அமையாததையும் கவனிக்க வேண்டும். பிறகு, நமது மிடில் ஆர்டர் செட் ஆகி இருக்கிறது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே ரன்களை சேர்த்து வருகின்றனர்,” என்று தெரிவித்தார்.