india
இது முதல்முறையல்ல… சர்ச்சை நாயகன் தர்ஷன் மைசூரு சர்ச்சைகள்!
ரேணுகா சுவாமி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன், இதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர்.
நள்ளிரவு ஆக்சிடண்ட்
கடந்த 2018 செப்டம்பர் 24ம் தேதி மைசூரு புறநகர்ப் பகுதியில் சாலையின் டிவைடரில் மோதியது தர்ஷனின் ஆடி சொகுசு கார். அந்த சமயத்தில் குடிபோதையில் தர்ஷன்தான் அந்த காரை ஓட்டி வந்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள். ஆனால், அப்போது வண்டியை ஓட்டியது தானே என்று தர்ஷனின் நண்பர் ராய் ஆண்டனி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதேநேரம், சம்பவ இடத்துக்கு போலீஸ் வருவதற்குள் அந்த கார் வேறொரு வண்டி மூலம் பெங்களூரு கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் அந்த வழக்கும் ஒன்றுமில்லாமல் ஆனது.
சர்ச்சை பார்ட்டிகள்
மைசூருவின் ஹெப்பல் பகுதியில் இருக்கும் பல்வேறு சொகுசு விடுதிகளிலும் தர்ஷன், தனது நண்பர்களுடன் இணைந்து விடிய விடிய பார்ட்டி செய்த சம்பவங்கள் இதற்கு முன் பல தடவை சர்ச்சையாகியிருக்கிறது. நண்பர் ஒருவருக்கு சொந்தமான ரெஸ்டோ பாரில் அடிக்கடி இப்படியான பார்ட்டிகளை தர்ஷன் நடத்துவதுண்டு. அப்படியான ஒரு பார்ட்டியின்போது தொழிலதிபர் யஷ்வந்த்குமார் என்பவர் டிஜேவிடம் புனித் ராஜ்குமார் பாடலை ஒலிக்கவிடும்படி கேட்டதற்காக, தர்ஷனின் ரசிகர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். சம்பவம் நடந்தபோது அங்கிருந்த தர்ஷன், இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வனத்துறை சர்ச்சை
அழிந்துவரும் பறவைகள் இன பட்டியலில் இருக்கும் வரித்தலை வாத்துகளை வேட்டையாடியதாக தர்ஷன் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதேபோல், புலி நகம், பற்கள் இவற்றைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்ததாகவும் வனத்துறைக்கு இவர் மீது புகார் பறந்தது. அப்படி ஒருமுறை ரெய்டு நடந்தபோது, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்ப போலியான பொருட்கள் மூலம் அவற்றை மாற்றி வைத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஹோட்டல் சர்ச்சை
கடந்த 2021 ஜூலை 14-ம் தேதி மைசூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குச் சென்ற தர்ஷன், உணவு கொண்டுவர தாமதமானதாகக் கூறி ஹோட்டல் ஊழியரைக் கடுமையாகத் தாக்கினார். ஊழியரைத் தகாத வார்த்தைகளில் திட்டி, அவர் மீது பணத்தை தர்ஷன் வீசியெறிந்தது தொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கன்னட திரையுலகைச் சேர்ந்த இந்திரஜித் லங்கேஷ் மற்றும் வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் சமரசம் செய்துகொள்ளப்பட்டது.