Connect with us

india

நண்பனின் துரோகம்; காதல் தோல்வி; நிதி நெருக்கடி… ஒராண்டு மர்ம முடிச்சை அவிழ்ந்த மொபைல் போன்!

Published

on

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விபரீத முடிவெடுத்த இளைஞரின் வழக்கில் இருந்த மர்ம முடிச்சை அவரின் செல்போன் அவிழ்த்திருக்கிறது.

அகமதாபாத்தை அடுத்த லம்பா பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான தர்ஷன் கச்சியா. கடந்த 2023 மே 9-ம் தேதி வீட்டின் முதல் மாடியில் இருந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய சென்றிருக்கிறார் தர்ஷன். நீண்ட நேரமாகியும் அவர் கீழே வராததால், தந்தை கோபால் – தாயார் நில்பா ஆகியோர் முதல் மாடிக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள்.

அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தர்ஷனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையின் வழக்கமான விசாரணைகள் முடிந்த நிலையில், அவரது உடலை பெற்றோர் தகனம் செய்தனர். ஆனால், என்ன காரணத்துக்காக தர்ஷன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து எந்தவொரு தகவலும் அவர்களுக்குக் கடந்த ஓராண்டாகத் தெரியாமல் இருந்திருக்கிறது.

இந்தநிலையில், தர்ஷனின் சிம்கார்டை அவரது சகோதரி பூமிகா ஆக்டிவேட் செய்து மொபலை ஆன் செய்திருக்கிறார். அப்போது, தர்ஷன் தனது நண்பரான லலித் குப்தாவுக்கு நிறைய பணத்தை அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தர்ஷன் குடும்பத்தினர், லலித்தை நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்டிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் அமைதிகாத்த லலித் ஒரு கட்டத்தில் உண்மைகளை எல்லாம் சொல்லியிருக்கிறார். கையில் ஏற்பட்ட எலும்பு முறிவால் பல மாதங்களாக வேலையில்லாமல் நிதி நெருக்கடியில் இருந்திருக்கிறார் லலித். அந்த சமயத்தில் ஒரு பெண்ணை ஒருதலையாக தீவிரமாகக் காதலித்து வந்திருக்கிறார் தர்ஷன்.

இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட லலித், தனக்கு ஒரு மாந்திரீகரைத் தெரியும். அவர் மூலம் ஒரு யாகம் நடத்தினால், அந்தப் பெண்ணை காதலிக்க வைத்துவிடலாம் என்று தர்ஷனை நம்ப வைத்திருக்கிறார். அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் என்றும் சொல்லியிருக்கிறார்.

அதை நம்பிய தர்ஷன், கிரடிட் கார்ட் மற்றும் பெர்சனல் லோன் எடுத்து 4 லட்ச ரூபாய் அளவுக்கு லலித்திடம் கொடுத்திருக்கிறார். சிறிது நாட்களில் அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் ஆன பிறகே, மாந்திரீகர் யாரும் இல்லை. பணத்துக்காக நண்பன் லலித் தன்னை ஏமாற்றியது தர்ஷனுக்குத் தெரிய வந்திருக்கிறது.

இந்த பிரச்னைகளோடு மாதம் மாதம் 26,000 ரூபாய் அளவுக்கு இ.எம்.ஐ செலுத்த வேண்டிய நிதி நெருக்கடியும் சேர்ந்துகொள்ளவே அந்த விபரீத முடிவை தர்ஷன் எடுத்தார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து லலித் மீது வழக்குப் பதிந்த போலீஸார் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

google news